தமிழக ஆளுநர் அர்லேகர் மாற்றப்படுகிறா? டெல்லியில் அமித்ஷாவுடன் நடந்த மீட்டிங்.. என்ன நடந்தது?

  • டெல்லி: தமிழக ஆளுநர் அர்லேகர் விரைவில் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று மத்திய அமைச்சரவையும் பெரிய அளவில் மாற்றி அமைக்கப்பட உள்ளது எனவும், சில மாநிலங்களில் ஆளுநர்களும் மாற்றப்படலாம் என்று தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில், தமிழக ஆளுநர் அர்லேகர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று டெல்லியில் சந்தித்து பேசியுள்ளனர்.

    Advertisement

    தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கேரளாவில் ஆளுநராக பதவி வகித்து வந்த அர்லேகர் நியமனம் செய்யப்பட்டார். இரு மாநிலங்களுக்கும் ஆளுநராக இருந்து வரும் அர்லேகர் நேற்று இரவு டெல்லியில் அமித்ஷாவை திடீரென சந்தித்து பேசினார்.

    Advertisement

    அரை மணி நேரம் நீடித்த சந்திப்பு

    இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசபப்ட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. குறிப்பாக தமிழகத்திற்கு விரைவில் புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படலாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. விரைவில் மத்திய அமைச்சரவையும் பெரிய அளவில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. அதேபோல சில மாநிலங்களில் ஆளுநர்களும் மாற்றப்படலாம் என்று தகவல்கள் பரவி வரும் நிலையில், நேற்றைய சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.

    அமித்ஷா- அர்லேகர் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இன்னொரு பக்கம் மேற்கு வங்க மாநில ஆளுநராக இருக்க கூடிய ஆர்.என். ரவியும் கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளாராம். உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆர்.என். ரவி வேறு மாநிலத்திற்கு ஆளுநராக மாற்றப்படுகிறாரா? இல்லை மத்திய அரசில் ஏதேனும் முக்கிய பொறுப்புக்கு கொண்டு வரப்படுகிறாரா? என்ற விவாதங்களும் டெல்லி வட்டாரத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    Advertisement

    விரைவில் முழு ஆளுநர்

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிதாக அமைந்துள்ள விஜய் அரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இன்னொரு பக்கம் குதிரை பேர புகார்கள் தொடர்ந்து எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தவெக ஆட்சியை கவிழ்க்கவே திமுக சதி செய்ததாக எழுந்து இருக்கும் குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது. நிமிடத்திற்கு நிமிடம் மாறும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் தமிழகத்தில் முழு நேர ஆளுநர் இல்லாதது சரியாக இருக்காது என்பதால் விரைவில் முழு ஆளுநர் நியமனம் செய்யப்படலாம் என்றே பேச்சு அடிபடுகிறது.

    Advertisement

    ஓரிரு நாட்களில் அறிவிப்பு?

    அர்லேகரே நியமனம் செய்யப்படுகிறாரா? அல்லது புதியவர்கள் நியமனம் செய்யப்பட இருக்கிறாரா? என்று தெரியவில்லை. ஆளுநர் இடமாற்றம், நியமனம் குறித்த ஓரிரு நாட்களில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆளுநராக இருக்க கூடிய அர்லேகர் தவெக அரசுடன் இணக்கமான போக்கையே கடைபிடித்து வருகிறார்.

    இதற்கு மத்தியில் திமுக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு எதிரான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்டு ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த கோப்புகளுக்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதுபோன்ற பல்வேறு முக்கிய விவகாரங்களுக்கு மத்தியில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் - உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    English Summary

    Tamil Nadu Governor: Reports suggest that Tamil Nadu Governor Arlekar may soon be replaced. Speculation is also rife regarding a major reshuffle of the Union Cabinet and potential changes of governors in several states. Against this backdrop, Tamil Nadu Governor Arlekar met with Union Home Minister Amit Shah in Delhi yesterday.