காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்?

  • டெல்லி: மத்திய பிரதேச அரசியல் களம் இப்போது பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறது. ராஜ்யசபா எம்பி தேர்தலில் போட்டியிடவிருந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு அதிரடியாக நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர வழக்கும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் களத்தில் இவ்வளவு பெரிய திருப்பம் ஏற்பட என்ன காரணம்? உச்ச நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்ததன் பின்னணியில் இருக்கும் சட்டப்பூர்வ காரணங்கள் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

    Advertisement

    வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஏன்?

    மத்திய பிரதேச ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மீனாட்சி நடராஜன் களம் இறங்கினார். ஆனால், கடந்த ஜூன் 9-ஆம் தேதியன்று தேர்தல் நடத்தும் அதிகாரியான அரவிந்த் சர்மா, மீனாட்சியின் வேட்புமனுவை நிராகரித்தார்.

    Advertisement

    பாஜகவின் குற்றச்சாட்டு

    பாஜகவின் ராஜ்யசபா வேட்பாளர் மகேஷ் கேவட் மற்றும் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராகுல் கோத்தாரி ஆகியோர் மீனாட்சி நடராஜனின் மனு மீது கடுமையான ஆட்சேபனைகளை எழுப்பினர். ஹைதராபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு குறித்த விவரங்களை மீனாட்சி நடராஜன் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் (Form 26) மறைத்துவிட்டார் என்பதுதான் பாஜகவின் முக்கிய குற்றச்சாட்டு.

    தேர்தல் அதிகாரியின் முடிவு

    ஹைதராபாத் நீதிமன்றம் கடந்த 2025 அக்டோபரில் அனுப்பிய நோட்டீஸிற்கு மீனாட்சி நடராஜன் பதிலளித்துள்ளார். ஆனால், அந்த வழக்கு விவரங்களை அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிடவில்லை. எனவே, அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் முழுமையற்றது என்று கூறி தேர்தல் அதிகாரி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.

    Advertisement

    உச்ச நீதிமன்றம் முன் வைக்கப்பட்ட வாதங்கள்

    வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மீனாட்சி நடராஜன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.

    காங்கிரஸ் தரப்பு வாதம்

    "ஹைதராபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஒரு தனிநபர் புகார் மட்டுமே. அந்தப் புகாரை நீதிமன்றம் இன்னும் அதிகாரப்பூர்வமாக விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளவில்லை (Cognisance). குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை.

    நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளாத ஒரு புகாரை, 'நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்கு' என்று கூற முடியாது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இதனைப்பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டிய கட்டாயம் இல்லை. தேர்தல் அதிகாரி தன்னிச்சையாகவும் தவறாகவும் வேட்புமனுவை நிராகரித்துள்ளார்" என்று சிங்வி வாதிட்டார்.

    Advertisement

    பாஜக மற்றும் தேர்தல் ஆணையத் தரப்பு வாதம்

    பாஜக மற்றும் தேர்தல் ஆணையத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் தமா சேஷாத்ரி நாயுடு ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "தேர்தலில் போட்டியிடுவது என்பது சட்டப்படியான ஒரு உரிமைதானே தவிர, அது அடிப்படை உரிமை அல்ல. மேலும், தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டதால், நீதிமன்றங்கள் இதில் தலையிட முடியாது" என்று அவர்கள் வாதிட்டனர்.

    உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஏன்?

    நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் ஏ.எஸ். சந்திரூர்கர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து, மீனாட்சி நடராஜனின் மனுவை முற்றிலும் தள்ளுபடி செய்தது. அதற்கான முதன்மையான காரணங்கள் இதோ:

    Advertisement

    தேர்தல் நேரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது

    சட்டப்படி ஜனநாயகம் செயல்படுவதைத் தடுக்கக்கூடும். தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டால் நீதிமன்றங்கள் அதில் தலையிட முடியாது என்பதை நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தேர்தல் தொடர்பான சர்ச்சைகளில் அரசியலமைப்புச் சட்ட நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    சட்டத்தில் விதிவிலக்கு அளிக்க முடியாது

    "வேட்புமனு நிராகரிப்பு முற்றிலும் சட்டவிரோதமானது என்று தெரிந்தால் நீதிமன்றம் தலையிடக் கூடாதா?" என்ற காங்கிரஸ் தரப்பு வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். அப்படி விதிவிலக்கு அளிக்கத் தொடங்கினால், தேர்தல் வழக்குகளை இரண்டு வகையாகப் பிரிக்க வேண்டிய சூழ்நிலை நீதிமன்றங்களுக்கு ஏற்படும். அரசியலமைப்புச் சட்டம் வழங்காத ஒரு விதிவிலக்கை நீதிமன்றமாக உருவாக்க முடியாது என நீதிபதிகள் கூறினர்.

    Advertisement

    தெளிவாக சொன்னால், தேர்தல் அதிகாரியின் உத்தரவு சரியா தவறா என்ற மெரிட் நிலைக்குள் உச்ச நீதிமன்றம் செல்லவே இல்லை. தேர்தல் நடக்கும் வேளையில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் கடுமையான விதியைக் சுட்டிக்காட்டியே இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மத்திய பிரதேச ராஜ்யசபா தேர்தலில் தற்காலிகமாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    இதபற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் நிர்வாகி சுப்ரதா தேவி, "செல்வி மீனாட்சி நடராஜனின் மாநிலங்களவை வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது; அவர் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. இது போன்ற ஒரு மனுவை விசாரிக்க குறைந்தபட்சம் 2-3 ஆண்டுகள் ஆகும், அதைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்தால் மாநிலங்களவை பதவிக்காலம் முடிந்துவிடும்! இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று கூறி, தேர்தல் ஆணையம் இதில் தலையிடாது! சுருக்கமாகச் சொன்னால்: ஒரு தேர்தல் அதிகாரி, உடனடி சட்டத் தீர்வு ஏதுமின்றி, ஒரு வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வெளிப்படையாகவே தன்னிச்சையான முறையில் செயல்பட முடியும். என்னவொரு 'மாபெரும் தந்திரம்' ! இவர்கள்தான் பெண்கள் இட ஒதுக்கீடு பற்றி பேசுகிறார்கள்" இவ்வாறு கூறியுள்ளார்.

    English Summary

    Is the Congresslosing a Rajya Sabha seat? Why did the SC reject Meenakshi Natarajan's petition?