இனி ராக்கெட்களை இஸ்ரோ தயாரிக்காது.. தனியாருக்கு போகும் முக்கிய வேலைகள்.. வரும் மிக பெரிய மாற்றம்!

  • டெல்லி: இந்தியாவின் விண்வெளி ஆய்வுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பெரிய மாற்றம் நடக்கவுள்ளது. அதாவது இதுநாள் வரை ராக்கெட்டுகள் மற்றும் சாட்டிலைட்களை இஸ்ரோவே தயாரித்து வந்த நிலையில், இனி அந்த பணிகளில் இருந்து இஸ்ரோ படிப்படியாக விலக போகிறதாம். அதற்கு பதிலாக இனி ராக்கெட் தயாரிப்பில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட போகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    இத்தனை காலமாக இந்தியாவில் விண்வெளி ஆய்வுகளை தனி ஆளாக மேற்கொண்டு வந்தது இஸ்ரோ தான். எந்தவொரு உள்கட்டமைப்பும் இல்லாத நிலையில் ஆரம்பித்து இன்று விண்வெளி துறையில் இஸ்ரோ மிக பெரிய அமைப்பாக மாறியிருக்கிறது. இப்போது உலகின் முக்கியமான விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றாகவும் இஸ்ரோ உருவெடுத்துள்ளது.

    Advertisement

    தனியார் வசம் போகும் விண்வெளி துறை

    இதற்கிடையே பிஸ்னஸ் டுடே சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட IN-SPACe தலைவர் டாக்டர் பவன் கோயங்கா இது தொடர்பாக சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். இந்த மாற்றம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கூறிய அவர், இதுபோன்ற தினசரி உற்பத்தி பணிகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக ஆராய்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள், அறிவியல் திட்டங்கள் மற்றும் விண்வெளி உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் இஸ்ரோ கவனம் செலுத்த போகிறது என குறிப்பிட்டார்.

    இது தொடர்பாக பவன் கோயங்கா மேலும் கூறுகையில், "இனி இஸ்ரோ எந்த ஏவுகணைகளையும் தயாரிக்காது. இவை அனைத்தும் தனியார் துறை அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும். இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக எஸ்எஸ்எல்வி தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி உரிமைகள் ஏல நடைமுறைக்கு பிறகு இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்தியாவின் முக்கியமான ராக்கெட்டுகளான பிஎஸ்எல்வி மற்றும் எல்விஎம்3 ஆகியவையும் தனியார் துறைக்கு மாற்றப்பட உள்ளது" என்றார்.

    Advertisement

    தனியாருக்கு முக்கியத்துவம்

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை போல இல்லாமல்.. பிஎஸ்எல்வி மற்றும் எல்விஎம் 3 ராக்கெட்கள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படாது. இதனால் தனியார் நிறுவனங்களே இந்த துறையில் முக்கிய பொறுப்பை ஏற்கும் சூழல் உருவாகும். அதாவது சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் தயாரிக்கும் நிலையில், மற்ற பெரிய ராக்கெட்களை தனியார் நிறுவனங்கள் நேரடியாக உற்பத்தி செய்ய போகிறது.

    இதனால் இஸ்ரோவுக்கு இனி வேலையே இருக்காது என அர்த்தமில்லை.. மாறாக, இன்னும் முக்கியமான விஷயங்களில் இஸ்ரோ கவனம் செலுத்த போகிறது. புதிய விண்வெளி தொழில்நுட்பங்களை உருவாக்குவது, ஆராய்ச்சிகளை மேற்கொள்வது, சிறப்பு செயற்கைக்கோள்களை உருவாக்குவது போன்ற பணிகளில் இஸ்ரோ அதிக கவனம் செலுத்தும்.

    Advertisement

    ராக்கெட் ஏவுதளம்

    ஒரு தொழில்நுட்பம் முழுமையாக வளர்ச்சியடைந்த பிறகு, அதன் உற்பத்தி மற்றும் வணிக பயன்பாட்டை தனியார் நிறுவனங்களுக்கு மாற்ற முடியும். இதுவரை 120 தொழில்நுட்பங்கள் இஸ்ரோவிலிருந்து தனியார் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பவன் கோயங்கா தெரிவித்துள்ளார். மேலும், புதிதாக உருவாக்கப்படும் ஒரு லான்ச் சென்டரை அதாவது ஏவுதளத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் தனியார் துறைக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆபரேட்டர் அடுத்த 4 அல்லது 5 மாதங்களில் இறுதி செய்யப்படலாம் என அவர் கூறியுள்ளார்.

    இந்த மாற்றத்திற்கு பொருளாதார டார்கெட் தான் முக்கிய காரணமாக உள்ளது. தற்போது சுமார் 8 பில்லியன் டாலராக இருக்கும் இந்தியாவின் விண்வெளி பொருளாதாரத்தை, 2033க்குள் 44 பில்லியன் டாலராக உயர்த்த மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. இந்த இலக்கை அடைய மூன்று முக்கிய விஷயங்கள் தேவை என பவன் கோயங்கா கூறுகிறார்.

    Advertisement

    காரணங்கள்

    முதலாவது விண்வெளி நிறுவனங்களுக்கு அரசு முக்கிய வாடிக்கையாளராக இருக்க வேண்டும். இரண்டாவது, விண்வெளி தொழில்நுட்பத்தை விண்வெளி துறைக்கு வெளியேயும் அதிகமாக பயன்படுத்த வேண்டும். மூன்றாவது, இந்திய நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும். இதன் ஒரு பகுதியாக, பாதுகாப்புத்துறை ஏற்கனவே தனியார் நிறுவனங்களிடம் இருந்து 31 செயற்கைக்கோள்களுக்கு ஆர்டர் வழங்கியுள்ளது. இது வரும் காலங்களில் மேலும் விரிவடையவே போகிறது.

    அதாவது சுருக்கமாக சொன்னால்.. இதுவரை ராக்கெட் முதல் சாட்டிலைட் வரை பல்வேறு பணிகளை மேற்கொண்டு இந்தியாவின் விண்வெளி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த இஸ்ரோ, இனி இதில் உற்பத்தி பொறுப்புகளை மட்டும் தனியார் வசம் ஒப்படைக்க போகிறது. இதன் மூலம் ஆராய்ச்சி பணிகளில் இஸ்ரோ அதிக கவனம் செலுத்த போகிறது.

    English Summary

    ISRO is set to gradually move away from routine rocket manufacturing as India expands private sector participation(இந்தியாவில் விண்வெளி துறையில் அதிகரிக்கும் இஸ்ரோ ஆய்வு): ISRO Space Sector Shift latest news in tamil.