இனி நடக்கவே கூடாது.. உண்ணாவிரதத்தால் சோனம் வாங்சுக் உள்பட 4 பேரின் உடல்நலம் மோசமானது

  • டெல்லி: 'நீட்' தேர்வு முறைகேடுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்பட மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் சோனம் வாங்சுக் உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர் அமைப்பினர் தலைவர்களின் நிலைமையும் மோசமாகி உள்ளது. அவர்களை நடக்க வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    Advertisement

    மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் நீட் உள்பட பல்வேறு தேர்வுகளில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வருகிறது. நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். சோனம் வாங்சுக் உடன் ஏஐஎஸ்ஏ எனும் அகில இந்திய மாணவர் அமைப்பை சேர்ந்த நேஹா, மனிஷ், ஆமீன் ஆகியோர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இவர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று 20வது நாளை எட்டி உள்ளது. தொடர் உண்ணாவிரதத்தால் அவர்களின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    உண்ணாவிரதம் மேற்கொள்வோரை டாக்டர்கள் அவ்வப்போது கண்காணித்து வுருகின்றனர்.இந்நிலையில் தான் அவர்களின் உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஆபத்தான கட்டத்தை எட்டி உள்ளதாகவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக சோனம் வாங்சுக்கின் உடல்நலம் மோசமாகி உள்ளது. அவர் உண்ணாவிரதத்தை தொடரும் பட்சத்தில் உடல்உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் பல்வேறு தரப்பினர் அவரது உண்ணாவிரதத்தை கைவிடும்படி கூறி வருகின்றனர். ஆனால் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட மறுத்து வருகிறார்.

    இந்நிலையில் தான் உண்ணாவிரத போராட்டம் பற்றி சோனம் வாங்சுக் இன்று போராட்டக்காரர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், ''உண்ணாவிரத போராட்டம் இன்று 20வது நாளை எட்டி உள்ளது. என்னுடைய உடல்நிலை பலவீனமடைந்துள்ளது. ஆனால் எனனுடைய உறுதி இன்னும் தளரவில்லை. நான் ஜூலை 20ம் தேதி (நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் நாள்) வரை எந்த விலை கொடுத்தாவது உண்ணாவிரத போராட்டத்தை தொடருவேன். அதுவரை உயிரோடு இருப்பேன்'' என்று கூறியுள்ளார்.

    Advertisement

    அதேபோல் சோனம் வாங்சுக் உடன் அனைத்திந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 3 பேர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இவர்களின் உடல்நிலையும் மோசமாகி உள்ளது. ஒருவர் 'ஹைபோகிளைசீமியா' பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. 'ஹைபோகிளைசீமியா' என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து இருப்பதை குறிக்கும். இதனால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். மேலும் அவர்கள் அனைவரும் இனி நடக்க வேண்டாம். இனி சக்கர நாற்காலியை தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    இதுபற்றி மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவர் சாய் பாலாஜி கூறுகையில்,'' உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் இனி நடக்கமாட்டார்கள். சக்கர நாற்காலியை பயன்படுத்தி உண்ணாவிரதத்தை தொடர்வார்கள்'' என்று கூறியுள்ளார்.
    சோனம் வாங்சுக் உள்பட மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று மொத்தம் 4 பேர் 20 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தாலும் கூட அவர்களை மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    இதற்கிடையே தான் இவர்களின் போராட்டத்துக்கு நாடு முழுவதும் இருந்து அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திமுக எம்பி எச் ராசா இன்று சோனம் வாங்சுக்கை சந்தித்து பேசி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இந்த விவகாரத்தை வரும் 20ம் தேதி கூடும் நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளதாக கூறினார்.

    English Summary

    Social activist Sonam Wangchuk and leaders of various student organizations have been on a hunger strike for 20 days at Delhi's Jantar Mantar, demanding that Union Education Minister Dharmendra Pradhan resign and accept responsibility for the irregularities in the NEET examination. Sonam Wangchuk's health has severely deteriorated, and the condition of the student leaders has also worsened; doctors have advised them against walking.