டெல்லி: மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்தார். மாணவர்கள் போராட்டத்தில் ராகுல் காந்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் என்று சாடியுள்ளார்.
'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து பேராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சியினர், மாணவர் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனர். இது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போராட்டம் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது. இந்நிலையில் தான் இன்று இரவு 8.30 மணிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: '' மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் வினாத்தாள் கசிவை யாரும் அரசியலாக்க கூடாது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட முயலக்கூடாது என்று வலியுறுத்துகிறேன். எதிர்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. ராகுல் காந்தி மாணவர்களின் போராட்டத்தில் இருந்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார். அவர் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலேயே வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன. இது ஒரு தீவிரமான பிரச்சனை. பிரச்சனையை சரிசெய்ய தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும் இந்த விவகாரத்தில் விரிவான விவாதம் அவசியம். பிரச்சனைகள் பற்றி விவாதிக்க நாடாளுமன்றம் தான் சரியான இடம். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாராக இருக்கிறோம். வினாத்தாள் கசிவு முதல் அதன்பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வரை அனைத்தையும் விவாதிக்க தயார். வினாத்தாள் சிந்தது எப்படி? பின்னணியில் யார் யார்? மத்திய அரசு எந்தெந்த நடவடிக்கை எடுத்துள்ளது?. இந்த பிரச்சனையை எவ்வாறு மத்திய அரசு கையாண்டது? மற்ற அரசுகள் எவ்வாறு கையாள வேண்டும்? பல லட்சம் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கலாம். பதிலுக்கு பதில் பழி கூறுவதை விட்டுவிட்டு நாடாளுமன்றத்தில் இதுபற்றி விவாதிக்க வேண்டும். இந்த விவகாரத்துக்கான சிறந்த களம் நாடாளுமன்றம் தான். அதேபோல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பான அதேவேளையில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அரசு என்பதை நான் மீண்டும் உறுதியாக கூறி கெள்கிறேன். அனைத்து பிரச்சனைகளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதில் இந்த அரசு ஆர்வமாக உள்ளது. அதன்படி விவாதத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்கள் விரும்பினால் 12 மணிநேர விவாதத்துக்கும், அவர்கள் விரும்பினால் 18 மணிநேர விவாதத்துக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்று சாடினார்.