டெல்லி: செப். 23ம் தேதி, தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை கொடுத்திருந்தது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் சந்திர சர்மாவின் மகன், தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞராக இருக்கும்போது.. எப்படி இந்த வழக்கில் நீதிபதி சதீஷ் தீர்ப்பு வழங்கலாம் என்று கேள்வி எழுந்திருக்கிறது.
நீதித்துறையில் முக்கியமான விதி ஒன்று இருக்கிறது. நீதி வழங்குவது முக்கியம் என்றாலும், அந்த நீதி நியாயமானது என்பது மக்களின் பார்வைக்கு தெரிய வேண்டும் என்பதுதான் அந்த விதி. எனவே, வழக்கில் தொடர்புடையவர்களுடன் நீதிபதி சம்பந்தப்பட்டிருக்கிறார்.. அதாவது வழக்கில் உள்ளவர்களின் உறவினர், நண்பர், தெரிந்தவராக நீதிபதி இருந்தால்.. அவராகவே முன்வந்து இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வார்.
இதுதான் நீதித்துறையின் வழக்கம். ஆனால், தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கில் இப்படி நடக்கவில்லை. தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என 3 பேர் இருந்தனர். இப்படி இருக்கையில், கடந்த 2023ம் ஆண்டு மத்திய அரசு புதிய சட்டத்தை போட்டது. அதன்படி இனி இந்த குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் நியமிக்கப்படும் மூத்த அமைச்சர் இடம் பெறுவார் என்று சொல்லப்பட்டது. இந்த கணக்குப்படி பார்த்தால்.. பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர் சொல்பவர்தான் புதிய தேர்தல் ஆணையராக வர முடியும். அதாவது மத்திய அரசுக்கு சப்போர்ட்டாக இருப்பவர்தான் ஆணையராக வருவார். பின்னர் அவர் மத்திய அரசுக்கு சாதகமாக செயல்பட மாட்டார் என்று என்ன நிச்சயம்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் தீபங்கர் தத்தா என இரண்டு பேர் கொண்ட அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையெல்லாம் முடிந்து செப்.23 அன்று.. ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் தீர்ப்பு வெளியாகியிருந்தது. இதில் நீதிபதி தீபங்க தெளிவான ஸ்டாண்ட் எடுத்திருந்தார். கிரிக்கெட் போட்டியில் ஒரு டீமின் கேப்டன் வந்து.. அம்பயரை நியமித்தால் எப்படி இருக்கும்? அந்த அம்பயர் யாருக்கு சாதகமான தீர்ப்பு கொடுப்பார்? அதுபோலத்தான் இருக்கிறது மத்திய அரசின் இந்த நிலைபாடும் என்று காட்டமாக கூறியிருந்தார். அப்படியே இந்த பக்கம் வந்தால்.. சதீஷ் சந்திர சர்மா, "ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கியது சரியா தவறா என்பதை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்" என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார். இந்த தீர்ப்புதான் தற்போது விமர்சனங்களாக வெடித்திருக்கிறது. மேலே சொன்னதை போல சதீஷ் சந்திர சர்மாவின் மகன் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வழக்கறிஞராக இருக்கிறார். தேர்தல் ஆணையத்துடன் தனது குடும்ப உறுப்பினர் சம்பந்தப்பட்டிருக்கிறார் எனில், அது தொடர்பான வழக்கிலிருந்து நீதிபதிகள் விலகுவதுதான் மரபு. அதை செய்யாமல் வழக்கை விசாரித்து சதீஷ் சந்திர சர்மா தீர்ப்பு கொடுத்திருக்கிறார். இதைத்தான் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியருக்கின்றனர். இந்த பஞ்சாயத்து இத்துடன் நிற்கவில்லை.. கௌதம் புத்த நகர் கலெக்ட்டர் மேதா ரூபம் தொடர்பான வழக்கையும் சதீஷ் சந்திர சர்மா விசாரித்திருக்கிறார். மேதா ரூபம் என்பவர் வேறு யாருமில்லை, அவர் தற்போது தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருக்கும் ஞானேஷ் குமாரின் மகள்தான். இப்படியாக தொடர்ந்து தேர்தல் ஆணையம் தொடர்பான வழக்குகளை சதீஷ் சந்திர சர்மா விசாரித்ததுதான் தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.