சாக்கடை தலைமுறை.. பார்க்கவே அருவருப்பா இருக்கு!.. நீட் போராட்டம் பற்றி கங்கனா ரணாவத் சர்ச்சை

  • டெல்லி: கரப்பான் பூச்சி கட்சி நடத்திய மாணவர் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் குறித்து பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரணாவத் கூறியுள்ள சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. போராடும் மாணவர்கள் படிப்பில் சிறந்தவர்கள் இல்லை என்று சாடியிருந்த கங்கனா ரணாவத், போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் வாழ்வது சாக்கடை வாழ்க்கை என்றும் சர்ச்சை கருத்தை கூறியிருக்கிறார்.

    Advertisement

    நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்து 36 நாட்கள் நடத்திய போராட்டம், மத்திய அரசுக்கு மிக பெரிய தலைவலியை கொடுத்தது. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் அவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு மத்திய அரசால் முடியவில்லை. இறுதியில் பிராதான கோரிக்கையான தர்மேந்திர பிரதான் ராஜினாமாவுக்கு பிறகே கடந்த ஜூலை 25ம் தேதி இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

    Advertisement

    கங்கனா ரணாவத்

    இதற்கிடையே நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத், கரப்பான் பூச்சி கட்சியை விமர்சித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் வீடியோக்களை பார்த்ததாக கூறியுள்ள அவர், "என் வாழ்நாளில் ஒரே இடத்தில் இவ்வளவு அருவருப்பை நான் பார்த்ததில்லை. Gen Z போராட்ட வீடியோக்கள் வாந்தி வர வைக்கின்றன. அவர்கள் பேசும் விதம், பயன்படுத்தும் மொழி மிகவும் தரக்குறைவானது. இவர்களை யார் பெற்று வளர்க்கிறார்கள்?

    இந்தியா கலாச்சாரத்திலும் நாகரிகத்திலும் சிறந்த நாடு. ஆனால் நீங்கள் உங்களை கரப்பான் பூச்சி' என்று அழைத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அதைப் போலவே நடந்துகொள்கிறீர்கள். இந்த வீடியோக்களை பார்த்ததால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் டிடாக்ஸ் தேவைப்படுகிறது" என்றும் குறிப்பிட்டார்.

    Advertisement

    சாக்கடை தலைமுறை

    அதேபோல மற்றொரு போஸ்ட்டில் போராட்டத்தில் பங்கேற்ற இளம் பெண்களை குறிவைத்து கங்கனா ரணாவத் சர்ச்சையான கருத்து தெரிவித்தார். அதில் அவர், "உண்மையான சுதந்திரமான பெண்கள் தங்களின் முடிவுகளுக்கு பொறுப்பேற்பார்கள். ஆனால் இந்த மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றும் புதிய தலைமுறை இந்திய பெண்களை நான் சாக்கடை தலைமுறை என்றே அழைக்கிறேன்.

    சில பெண்கள் குடும்பத்தை நடத்தக்கூடியவர்களாகவும் கூட இல்லை. போதைப்பொருள், மது, எண்ணற்ற உறவுகள் ஆகியவற்றையே சுதந்திரம் என்று பெருமையாக பேசுகிறார்கள். பெற்றோரின் பணத்தில் வாழ்ந்தபடியே சுதந்திர வாழ்க்கை வேண்டும் என்கிறார்கள். உண்மையான சுதந்திர வாழ்க்கையை சம்பாதிக்க வேண்டும். பொறுப்பில்லாமல் வாழ்வது சாக்கடை வாழ்க்கைக்கு சமம்" என்றும் சாடியுள்ளார்.

    Advertisement

    கடும் தாக்கு

    போராட்டக்காரர்களை பொதுமக்கள் தாக்கியதாக வெளியான தகவல்களை குறிப்பிட்டு கங்கானா, "மற்றவர்கள் சொல்வதையும் கேட்க தயாராக இருக்க வேண்டும். பொது சொத்துகளை சேதப்படுத்தினால்.. பொதுமக்களும் உங்களை எதிர்ப்பார்கள். நாட்டையும் அதன் தலைமையையும் தரக்குறைவாக விமர்சித்திருந்தால்.. அந்த அரசை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் பதிலளிக்கும் உரிமை உள்ளது. ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர் விளைவு இருக்கும். படிப்பில் அதை புரிந்து கொள்ளவில்லை என்றால், இப்போது வாழ்க்கையில் புரிந்துகொள்வீர்கள்" என்றும் பதிவிட்டுள்ளார்.

    பதிலடி

    கங்கனா ரணாவத்தின் இந்த போஸ்ட்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையல், பலரும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சௌத்ரி, "ஒரு எம்பி இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது வருத்தமளிக்கிறது. அரசிடம் இருந்து நல்ல பெயரை வாங்க இப்படி பேசுவதை ஏற்று கொள்ள முடியாது. இதற்கான விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும்" என்று கூறினார்.

    English Summary

    BJP MP and actor Kangana Ranaut has sparked controversy by criticizing NEET protesters(நீட் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத் கடும் விமர்சனம்): Kangana Ranaut on NEET Protests latest news in tamil.