ஞானேஷ் குமாருக்கு சிக்கல்.. ரூ. 2 கோடி லஞ்சம்.. மலேசிய இன்ஜினியர் தற்கொலை.. தீவிரமடையும் விசாரணை

  • டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது எழுந்துள்ள ரூ.2 கோடி லஞ்ச புகார் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு கேரள பொதுப்பணித்துறை செயலாளராக அவர் இருந்தபோது, சாலை பணிகளுக்கான பில்களை விடுவிக்க ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு முதற்கட்ட விசாரணை நடத்த கேரள உள்துறை உத்தரவிட்டுள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். எஸ்ஐஆர் விவகாரத்தில் அவர் தன்னிச்சையாக முடிவெடுத்தாக பிற தேர்தல் ஆணையர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர். தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று போராட்டங்களும் நடந்து வருகிறது.

    மற்றொரு சர்ச்சை

    இதற்கிடையே ஞானேஷ் குமார் இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது அவர் 2006ல் கேரள பொதுப்பணி துறை செயலாளராக இருந்தபோது, சாலை பணிகளுக்கான பில்களை விடுவிக்க ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது குறித்து முதற்கட்ட விசாரணை நடத்த கேரள அரசு இப்போது உத்தரவிட்டுள்ளார்.

    மலேசிய பொறியாளர் லீ சீ பீன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துடன் இந்த புகார் தொடர்புடையது. அதாவது இந்தியா - மலேசியா கூட்டு நிறுவனமான PATI-BEL மேற்கொண்ட சாலை பணிகளின் திட்ட மேலாளராக லீ பணியாற்றினார். அவரிடம் ஞானேஷ் குமார் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக ஒப்பந்ததாரர் சாஜன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    என்ன நடந்தது

    2005 நவம்பரில் மலேசியாவில் லீ தற்கொலை செய்து கொண்டார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டு, பணம் வழங்காததால் பில்களை விடுவிக்காமல் தாமதப்படுத்தியதாக அவர் தற்கொலை கடிதத்தில் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த குறிப்பில் ஞானேஷ் குமார் பெயரும் இடம் பெற்றிருந்ததாக காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் கடந்த மாதம் கேரள உள்துறை அமைச்சரிடம் புகார் அளித்திருந்தார். இருப்பினும், லீயின் கடிதம் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.

    இதன் அடிப்படையில் விசாரணை நடத்தலாமா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்பு பிரிவிடம் கேரள அரசு ஆலோசனை கேட்டிருந்தது. இந்த சூழலில் தான் ஒப்பந்ததாரர் சாஜன் அளித்த புதிய புகாரின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணைக்கு இப்போது உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்.

    விசாரணைக்கு உத்தரவு

    லீயுடன் நெருக்கமாக பணியாற்றியதாக கூறும் சாஜன், உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்க முடியாமல் லீ தவித்ததாகவும், பில்களை விடுவிக்க ஞானேஷ் குமார் ரூ.2 கோடி கேட்டதாக லீ தன்னிடம் தெரிவித்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். விசாரணை நடத்த அரசு முன்வந்தால், லீயின் குடும்பத்தினர் ஆதாரங்களை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து கடந்த மாதம் சட்டப்பேரவையில் பேசிய உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, 2006ஆம் ஆண்டு எழுந்த புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு விசாரித்ததாகவும், குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியாததால் விசாரணை முடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

    2003 முதல் 2006 வரை டெண்டர் நடைமுறைகளை பின்பற்றாமல் 76 பணிகள் ஒதுக்கப்பட்டதாக எழுந்த புகார்களிலும் ஞானேஷ் குமார் பெயர் இடம்பெற்றிருந்தது. முறைகேடுகளை உறுதிப்படுத்த முடியாததால் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாகவும், 2012ல் எட்டு வழக்குகள் தவறான தகவல் என நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்று கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கூறியிருந்தார். இருப்பினும், ஒரு மாதத்தில் மீண்டும் கேரள அரசு இந்த விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    English Summary

    Kerala has ordered a preliminary inquiry into allegations that Chief Election Commissioner Gyanesh Kumar sought(ஞானேஷ் குமாருக்கு எதிரான லஞ்ச புகார் கேரளாவில் விசாரணை): Rs 2 crore bribe new investigation against Gyanesh Kumar.