டெல்லி: கழிவறையின் கதவைத் திறக்கும்போது, உங்கள் கண் முன்னே 10 அடி நீள ராஜநாகம் படமெடுத்து நின்றால் எப்படி இருக்கும்? மிரண்டு ஓடிவிடுவீர்கள் அல்லவா... அப்படியொரு அதிர்ச்சிச் சம்பவம் தான் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் நடந்துள்ளது. கழிவறைக்குள் பாம்பு இருப்பதை அறிந்த வீட்டு உரிமையாளர், உடனடியாகக் கதவை மூடிவிட்டுப் பாம்பு பிடிக்கும் வீரருக்குத் தகவல் கொடுத்தார். அவரும் கழிவறைக்குள் பதுங்கியிருந்த ஆக்ரோஷமான ராஜநாகத்தைத் துணிச்சலுடன் வெளியே இழுத்து வந்து மீட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அப் பாம்பு பிடி வீரரின் துணிச்சலை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.
"பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்" என்பார்கள். அதுவும் இந்திய ராஜநாகம் என்றால் யாராக இருந்தாலும் நடுங்குவார்கள். அதன் கம்பீரமான தோற்றம் எவரையும் ஒரு வினாடி பயமுறுத்திவிடும். அதேநேரம், ராஜநாகம் மற்ற விஷப்பாம்புகளைப் போல மனிதர்களை உடனே தாக்க வேண்டும் என்ற நோக்கத்தை வெளிப்படுத்தாது. தனக்கு ஆபத்து என்றாலோ, தப்பித்துச் செல்ல வழி இல்லாதபடி ஒரு மூலைக்குள் அடைத்தாலோ, மிதித்தாலோ அல்லது தொடர்ந்து பயமுறுத்திக் காயப்படுத்தினாலோ மட்டுமே அது கடிக்க முற்படும். தன் உயிரைப் பாதுகாக்க இறுதிக்கட்ட ஆயுதமாகவே கடியைப் பயன்படுத்தும்; அதுவரை தன்னைப்பிடிக்க வருபவர்களைப் பயமுறுத்தி விரட்டவே பார்க்கும்.
இமாச்சலப் பிரதேச மாநிலம், பௌண்டா சாஹிப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நபர் ஒருவர் கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கு ராஜநாகம் படமெடுத்து ஆடியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாகக் கதவை வெளியிலிருந்து பூட்டிவிட்டார். பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரரான பூபேந்தர் சிங் என்பவரை அழைத்தார். பூபேந்தர் சிங் அந்த ஆபத்தான மீட்புப் பணியைக் கச்சிதமாக மேற்கொண்டார். ராஜநாகம் தன் படமெடுத்து அவரைத் தாக்க முற்பட்டபோதெல்லாம், அவர் ஒரு நீண்ட குச்சியைக் கொண்டு அதை வெளியேறும் வழியை நோக்கி நகர்த்தினார். பலரின் பார்வைக்கு இடையே, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, பூபேந்தர் சிங் பாம்பின் வாலைப் பிடித்து கழிவறையிலிருந்து வெளியே இழுத்துச் சாலைக்குக் கொண்டு வந்தார். பின்னர் மற்றொரு நபர் ஒரு பையுடன் அங்கு வந்தார்; இருவரும் இணைந்து அந்த ராஜநாகத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். பாம்பைப் பைக்குள் அடைக்க அவர்கள் போராடியபோதும், அது தொடர்ந்து எதிர்ப்பைக் காட்டிக்கொண்டே இருந்தது. இறுதியில் அதை வெற்றிகரமாகப் பிடித்து, குடியிருப்புப் பகுதியிலிருந்து பாதுகாப்பாகக் கொண்டு சென்று அடர்ந்த காட்டிற்குள் விடுவித்தனர். சிங்கின் இந்தத் துணிச்சலான மீட்புப் பணி காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. முக்கியக் குறிப்பு:
உங்கள் பகுதியில் ராஜநாகம், நல்லபாம்பு, சுருட்டை விரியன், கட்டுவிரியன், கண்ணாடி விரியன் போன்ற விஷப்பாம்புகளைக் கண்டால், உடனடியாக முறையான பயிற்சி பெற்ற பாம்பு பிடி வீரர்களுக்குத் தகவல் கொடுங்கள். வனத்துறை அல்லது தீயணைப்புத் துறையினருக்கு (101) அழைத்தால், அவர்கள் பயிற்சி பெற்ற வீரர்களின் துணையுடன் பாம்பைப் பத்திரமாக மீட்பார்கள். சுயமாகக் கைகளில் பிடிக்க முயற்சிக்கவோ அல்லது அடித்துக் கொல்ல முயலவோ வேண்டாம்; அது மிகவும் ஆபத்தானது.