கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற இருந்த கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பின் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அரங்க உரிமையாளர்களுக்கு பாஜக தலைவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ள கரப்பான் பூச்சி கட்சி, மாநில அரசிடம் இருந்து கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கூறியுள்ளது.
டெல்லியில் கடந்த மாதம் கரப்பான் பூச்சி கட்சியினர் நீட் குளறுபடிகளை கண்டித்து மிக பெரிய போராட்டம் நடத்தினர். இதற்கு நாடு முழுக்க மிக பெரிய ஆதரவு கிடைத்தது. இதனால் வேறு வழியின்றி மத்திய கல்வி துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது கரப்பான் பூச்சி இயக்கத்திற்குக் கிடைத்த மிக பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நாடு முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகளை கரப்பான் பூச்சி கட்சி ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி மேற்கு வங்க மாநிலத்திலும் கரப்பான் பூச்சி கட்சி நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தது. வடக்கு கொல்கத்தாவில் உள்ள பாரத் சபா ஹாலில் கர்பான் பூச்சி கட்சி சார்பில் மீட்டிங் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கரப்பான் பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் அஷ்தோஷ் ரங்கா பங்கேற்று, பொதுமக்களுடன் கலந்துரையாட இருந்தார். இருப்பினும், அந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. பாஜக தலைவர்களிடம் இருந்து மிரட்டல்கள் வந்ததை தொடர்ந்து ஹால் உரிமையாளர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்ததாக அஷ்தோஷ் ரங்கா குற்றஞ்சாட்டியுள்ளார். மாற்று இடம் தேடியபோது மேலும் 6 அரங்கங்களின் உரிமையாளர்களும் நிகழ்ச்சிக்கு இடம் வழங்க மறுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க பாஜக அரசிடம் இருந்து கடும் அழுத்தம் வந்ததாலேயே அவர்கள் மறுத்ததாகவும் அஷ்தோஷ் ரங்கா குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க பாஜக அரசுக்கு கரப்பான் பூச்சி கட்சியின் மீது அச்சம் இருப்பதாக கூறியுள்ள அஸ்தோஷ், இதன் காரணமாகவே பாஜக இப்படி அழுத்தம் கொடுப்பதாகவும் கூறினார். மேலும், இந்த அழுத்தத்தை கண்டு எல்லாம் கரப்பான் பூச்சி கட்சி பயப்படாது என்றும் விரைவில் இதைவிட மிக பெரிய நிகழ்ச்சியை நடத்துவோம் என்றும் கூறியுள்ளார். மீட் அப் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டாலும், மேற்கு வங்கத்தில் கரப்பான் பூச்சி கட்சியின் பள்ளி ஆய்வு பிரசாரம் தொடர்ந்து நடைபெறும் என்று அஷ்தோஷ் ரங்கா தெரிவித்துள்ளார். இந்த பள்ளி ஆய்வின் கீழ் கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் நிலை குறித்து கரப்பான் பூச்சி கட்சி ஆர்வலர்களும் பொதுமக்களும் ஆய்வு செய்து வருகின்றனர். அங்கு நிலைமை சரியில்லை என்றால் உடனடியாக பணிகளை சீர் செய்ய அழுத்தம் கொடுப்போம் என கரப்பான் பூச்சி கட்சி தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் இந்த ஆய்வின் ஒரு பகுதியாக கரிஷுந்தா பஸ்சிம்பாரா தொடக்க பள்ளிக்கு சென்று கரப்பான் பூச்சி கட்சியின் அப்துல் ஹபீஸின், பள்ளியின் நிலைமையை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவரது தந்தை ஷேக் முகமது மாஃபிக் மர்மமான முறையில் உயிரிழந்தார். பாஜகவினரே அவரது தந்தையை தாக்கியதாக கரப்பான் பூச்சி கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் மிக பெரிய போராட்டம் நடத்தப்படும் என கரப்பான் பூச்சி கட்சி எச்சரித்துள்ளது. மாஃபிக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் 10 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு கரப்பான் பூச்சி கட்சி கெடு விதித்துள்ளது. அதற்குள் கைது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பாங்குரா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மிக பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று ஆசுதோஷ் ரங்கா தெரிவித்துள்ளார். மேலும், இந்தாஸ் போலீசாரின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாஃபிக் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கரப்பான் பூச்சி கட்சி வலியுறுத்தியுள்ளது.கொல்கத்தா நிகழ்ச்சி
பாஜகவுக்கு பயம்
தந்தை கொலை
10 நாட்கள் கெடு