பிரிவினையில் சொந்த மண்ணை இழந்தவர்.. பாஜகவை ஜீரோவில் இருந்து வளர்தெடுத்தவர்.. 100 வயதை எட்டிய அத்வானி

  • டெல்லி: பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி நேற்று (நவம்பர் 8) தனது 100வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தீபாவளி திருநாளுடன் அவரது பிறந்தநாளும் அமைந்தது இந்த ஆண்டின் சிறப்பம்சமாக இருந்தது. ஜனசங்கம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவது, டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாள் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா என முக்கிய நிகழ்வுகள் கொண்டாடப்படும் சூழலில் அத்வானியின் நூறாவது ஆண்டு தொடங்கியுள்ளது.

    Advertisement

    அத்வானி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, அத்வானியுடனான தனது அரசியல் பயணம் மற்றும் அவரை பற்றிய பல்வேறு நினைவுகளை பகிர்ந்துள்ளார். இந்தியாவின் நவீன அரசியல் வரலாற்றில் பல முக்கியமான அத்தியாயங்களில் அத்வானியின் பங்களிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நாட்டுக்காகவும் கட்சிக்காகவும் அத்வானி ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்துள்ளார்.

    Advertisement

    பிரிவினையால் ஏற்பட்ட இழப்பு

    1927 நவம்பர் 8ஆம் தேதி பிறந்த அத்வானி, 1947ஆம் ஆண்டு இந்திய பிரிவினையின்போது சிந்துவில் இருந்த தனது சொந்த மண்ணை விட்டு பிரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் அந்த இழப்புகளால் மனம் தளராமல், புதிய வாழ்க்கையை தொடங்கி, தனது அரசியல் பயணத்தை உருவாக்கினார். இந்த விடாமுயற்சிதான் பின்னர் ஜனசங்கத்தை வலுப்படுத்தவும், பாஜகவை நாடு முழுவதும் வளர்க்கவும் அவருக்கு உதவியதாக மோடி தெரிவித்துள்ளார்.

    அத்வானி பாஜக தலைவராக இருந்த காலகட்டங்களில் காங்கிரஸின் லோக்சபா பலம் 400 என்பதில் இருந்து 1989ஆம் ஆண்டு 200க்கும் கீழ் சரிந்தது. 1996ஆம் ஆண்டு பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பல தலைமுறைகளாக கட்சி தொண்டர்களை உருவாக்கியதுடன், நாட்டுக்கு முதலிடம் என்ற கொள்கையில் பாஜகவை வளர்த்தெடுத்தவர் அத்வானி என்றும் மோடி பாராட்டியுள்ளார்.

    Advertisement

    பதவிகள்

    அத்வானியின் அரசியல் வாழ்க்கையில் கொள்கை தெளிவும், அறிவார்ந்த சிந்தனையும் தனித்துவமானவை என குறிப்பிட்டுள்ள மோடி, அவரது உரைகள், எழுத்துகள், நேர்காணல்கள் ஆகியவை இதற்கு சான்று எனத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக பணியாற்றிய அத்வானி, பின்னர் டெல்லிக்கு வந்து அடல் பிஹாரி வாஜ்பாயுடன் இணைந்து பணியாற்றினார். இருவரும் பல தசாப்தங்களாக இணைந்து பணித்துள்ளனர். இருவரும் எதிரியாக மாறாமல், ஒருவருக்கொருவர் துணையாக செயல்பட்டது இந்திய அரசியலில் சிறந்த முன்னுதாரணம் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    நெருக்கடி நிலை முதல் ரத யாத்திரை வரை

    1970ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக தொடங்கிய அத்வானியின் நாடாளுமன்ற பயணம், பின்னர் மக்களவை உறுப்பினர், எதிர்க்கட்சி தலைவர் எனப் பல பொறுப்புகளுக்கு விரிந்தது. 1975ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்தில் அவர் தீவிரமாக பங்கெடுத்தார். ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க அவர் நடத்திய போராட்டம் முக்கியமானது. சிறையில் இருந்த அனுபவங்களை புத்தகமாக எழுதிய அத்வானி, நெருக்கடி நிலையை 1933ஆம் ஆண்டு ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் ஏற்பட்ட நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுள்ளார்.

    Advertisement

    1977ஆம் ஆண்டு ஜனதா ஆட்சியில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக பணியாற்றிய அத்வானி, பின்னர் உள்துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் பொறுப்பு வகித்தார். நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும், பாதுகாப்புப் படையினரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் அவர் நடவடிக்கை எடுத்ததாக மோடி தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிராக அவர் எடுத்த உறுதியான நிலைப்பாட்டின் விளைவாக கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் கொண்டு வரப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

    திருப்பம்

    அத்வானியின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரை அவர் மேற்கொண்ட ரத யாத்திரை. இந்த யாத்திரையின் திட்டமிடல் முதல் யாத்திரை வரை அனைத்திலும் தானும் பங்கேற்றதை மோடி நினைவுகூர்ந்துள்ளார். பீகாரில் அத்வானி கைது செய்யப்பட்டபோது ஏற்பட்ட வருத்தத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராமர் கோயில் விவகாரத்தில் சமரசம் கிடையாது என்ற உறுதியுடன் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எடுத்த முடிவு, பல ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் உருவாக வழிவகுத்ததாக தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அத்வானியின் எளிமையையும் மோடி தனியாகக் குறிப்பிட்டுள்ளார். பொது வாழ்க்கையில் நேர்மைக்கும் ஒழுக்கத்துக்கும் முக்கியத்துவம் அளித்தவர் அத்வானி என்றும், செய்தி தாள்களை தீவிரமாக வாசிப்பதுடன் திரைப்படங்கள், நாடகங்கள் மீதும் ஆர்வம் கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளார். தனது சிந்தி கலாச்சார தொடர்பை தொடர்ந்து பாதுகாத்த அத்வானி, லே பகுதியில் சிந்து தரிசன பூஜையை பிரபலப்படுத்தவும் முயன்றார். அவரது பொது வாழ்க்கையில் மனைவி கமலா அத்வானி தொடர்ந்து உறுதுணையாக இருந்ததையும் மோடி நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

    வாழ்த்து

    2024ஆம் ஆண்டு அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கி இந்தியா கௌரவித்தது. கராச்சியில் பிறந்த அத்வானி தனது வாழ்க்கை இத்தகைய அரசியல் பயணமாக மாறும் என்று எதிர்பார்த்திருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள மோடி, அவர் நல்ல உடல்நலத்துடன் வாழவும் தொடர்ந்து பலருக்கு உத்வேகம் அளிக்கவும் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

    English Summary

    Prime Minister Narendra Modi has paid tribute to veteran BJP leader LK Advani as he enters his 100th year(அத்வானியின் 100வது பிறந்த நாள் மோடி): Modi recalled Advani's role in building the BJP, opposing the Emergency and leading the Ram Rath Yatra.