நீதிமன்றம் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்.. கபில் சிபல் சொன்ன வார்த்தை.. சுப்ரீம் கோர்ட் பதில்

  • டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் மீது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இழந்ததாகக் கூறிய நம்பிக்கையை மீட்டெடுக்க உறுதியாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகத் தொடர்ந்து புகார் அளித்தும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனக் கூறி, இனி நீதிமன்றத்தை அணுகுவதில் என்ன பயன் என்று கேள்வி எழுப்பிய சிபலின் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்துக்கு போலீசார் விதித்த கட்டுப்பாடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விசாரணை நடைபெற்றது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பலர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டனர். அதில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

    Advertisement

    நம்பிக்கை இழந்துவிட்டோம்

    முன்னதாக சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், உச்ச நீதிமன்றம் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதாவது தேர்தல் நடைமுறைகள் தொடர்பான புகார்களுக்காக தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அணுகுவதில் சோர்வடைந்துவிட்டதாகவும் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் கூறினார். அவர் மேலும், "உச்ச நீதிமன்றத்துக்கு செல்வதில் நாங்கள் சோர்வடைந்துவிட்டோம். அங்கு செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார். இது தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

    தலைமை நீதிபதி மீது அதிருப்தியா என்று கேட்கப்பட்டபோது, "இது தனிப்பட்ட மகிழ்ச்சி அல்லது அதிருப்தி தொடர்பான பிரச்சினை அல்ல. மக்களின் உரிமைகளுக்காக போராட வேண்டியது வழக்கறிஞர்களின் பொறுப்பு" என்றும் அவர் கூறினார்.

    Advertisement

    கட்டுப்பாடுகள் ஏன்

    பிஎன்எஸ் சட்டத்தின் 163வது பிரிவை பயன்படுத்தி போராட்டங்களை கட்டுப்படுத்துவது குறித்தும் கபில் சிபல் கேள்வி எழுப்பினார். அமைதியான முறையில் போராடுபவர்களால் சமூகத்துக்கு என்ன ஆபத்து ஏற்படுகிறது என்று கேள்வி எழுப்பிய அவர், அரசே அச்சத்தில் இருப்பதாக தோன்றுகிறது என்றார். ரயில் அல்லது விமானம் மூலம் டெல்லிக்கு வந்து கொண்டிருந்தவர்களை போராட்ட இடத்தை அடைவதற்கு முன்பே கைது செய்வதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்ற விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    டெல்லியில் 28 பட்டாலியன்கள் உள்ளிட்ட பெருமளவிலான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டு பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டிய கபில் சிபல், "ஒட்டுமொத்த டெல்லியையும் எவ்வளவு காலத்துக்கு இதேபோல தடுப்புகளை போட்டு அடைக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    உத்தரவு

    இதற்கிடையே இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது. டெல்லியில் மக்கள் நடமாட்டத்தை உறுதி செய்ய தேவையில்லாத தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்ட ஒழுங்கை பாதுகாக்கத் தேவையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, மெட்ரோ சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்றும் இணைய சேவைகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. வழக்கறிஞர்கள் தங்களது பணிகளை தடையின்றி ஆற்றவும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    நீதிமன்றம்

    அப்போது கபில் சிபில் நீதிமன்றம் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறியதை குறிப்பிட்ட நீதிபதிகள் அமர்வு, "இந்த அமைப்பின் மீது கபில் சிபலுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த நாங்கள் இங்கே இருக்கிறோம். நீதி அமைப்பு மீது அவருக்கு இருந்த நம்பிக்கை எங்களுடைய மிக உறுதியான ஆயுதங்களில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. அதை நிச்சயம் மீட்டெடுப்போம்" என்று தெரிவித்தது.

    English Summary

    Supreme Court has said it is determined to restore senior advocate Kapil Sibal’s faith in the institution(நீதிமன்றம் குறித்து கபில் சிபல் பிரஸ் மீட்): Lost faith in Supreme Court says Kapil Sibal.