டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

  • டெல்லி: டெல்லி அரசியல் வட்டாரங்களில் இப்போது ஹாட் டாப்பிக்கே இதுதான். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 3-வது பாஜக அரசு, ஜூன் 9 ஆம் தேதியுடன் தனது 2 வது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்தச் சூழ்நிலையில், ஆட்சிக்கும் கட்சிக்கும் புதிய எனர்ஜியைக் கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய அளவில் அதிரடி மாற்றங்களைச் செய்ய பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. ஜூன் மாத மத்தியில் இந்த மெகா மாற்றம் அரங்கேறப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    சமீபத்தில் 5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பிய அன்றே, சுமார் 5 மணி நேரம் அனைத்து அமைச்சர்களுடனும் தீவிர ஆலோசனை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் நடக்கவுள்ளன.

    Advertisement

    12 அமைச்சர்களுக்கு 'கட்' - புதுமுகங்களுக்கு 'டிக்'

    தற்போதுள்ள அமைச்சரவையில் இருந்து சுமார் 12 அமைச்சர்கள் வரை நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சிறப்பாகச் செயல்படாத அமைச்சர்கள் மற்றும் தங்கள் மாநிலங்களில் கட்சி வளர்ச்சிக்கு உதவாதவர்களின் பட்டியலைத் தலைமை ஏற்கனவே தயார் செய்துவிட்டது. அவர்களுக்குப் பதிலாகப் புதிய முகங்களுக்கும், சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சில முக்கியப் புள்ளிகளுக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாம்.

    அமைச்சர் டூ கட்சிப் பணி

    மத்திய அமைச்சரவையில் இருக்கும் சில சீனியர்கள் கட்சிப் பணிக்கு மாற்றப்படவுள்ளனர். இதற்கு முன்னோட்டமாக ஏற்கனவே சில மூவ்கள் நடந்துவிட்டன:

    Advertisement

    நிதித்துறை இணை அமைச்சராக இருந்த பங்கஜ் சவுத்ரி, உத்தர பிரதேச மாநில பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக இருந்த ஹர்ஷ்மல் கோத்ரா, டெல்லி மாநில பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல், கர்நாடக மாநில பாஜகவை வழிநடத்த தற்போதைய மத்திய அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஒருவர் அனுப்பப்பட உள்ளதாகத் தெரிகிறது.

    70 பிளஸ் பார்முலா

    70 வயதைக் கடந்த அமைச்சர்கள் மற்றும் மாநிலங்களவை பதவிக்காலம் முடியப் போகும் மூத்த அமைச்சர்களுக்கு இந்த முறை கல்தா கொடுக்கப்படலாம். அவர்கள் முழு நேரமாகக் கட்சிப் பணிகளில் ஈடுபடுத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும், செயல்திறன் குறைவாக இருந்ததாகக் கணிக்கப்பட்ட 3 இணை அமைச்சர்கள் (அதில் ஒருவர் தென் மாநிலத்தைச் சேர்ந்தவர், ஒருவர் உ.பி, மற்றொருவர் வடகிழக்கு மாநிலத்தவர்) பதவியிலிருந்து தூக்கப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

    Advertisement

    மணிப்பூர் & கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம்

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மீது டெல்லி தலைமை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அங்கு புதிய பா.ஜ.க தலைவரை நியமிப்பதோடு, மணிப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கு மத்திய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்த அவர்களுக்கும் கூடுதல் அமைச்சர் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

    அடுத்த நகர்வு என்ன?

    ஆட்சிக்கு எதிரான பிம்பம் எழும்பிவிடக் கூடாது என்பதிலும், வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களைச் சந்திக்கக் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதிலும் பா.ஜ.க தலைமை உறுதியாக உள்ளது. ஜூன் பாதியில் நடக்கப்போகும் இந்த அமைச்சரவை மாற்றம், இந்திய அரசியலில் அடுத்த கட்டப் பரபரப்பைக் கிளப்பப் போவது உறுதி.

    English Summary

    BJP leadership plans to undertake a massive reshuffle of the Union Cabinet to infuse fresh energy into both the administration and the party. Reports suggest that this major overhaul is set to take place in mid-June.