செய்யாத குற்றத்துக்காக 22 ஆண்டு சிறை.. இறுதியில் விடுதலை.. உச்சநீதிமன்றம் சொன்ன முக்கிய கருத்து!

  • டெல்லி: கொலை வழக்கில் குற்றவாளி என தண்டனை விதிக்கப்பட்டு சுமார் 22 ஆண்டுகள் சிறையில் கழித்த நபர் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் நம்பகமான ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அப்போது உறுதியான ஆதாரம் இன்றி ஒருவரின் 22 ஆண்டு வாழ்க்கை பறிக்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

    Advertisement

    நமது நாட்டில் போலீஸ் விசாரணை நடைமுறைகளில் உள்ள குளறுபடிகள் காரணமாக செய்யாத தவறுக்கும் கூட சிலர் தண்டனை பெறும் சூழல் உருவாகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. உரிய ஆதாரம் இல்லாமல் இந்த நபர் சுமார் 22 ஆண்டுகள் சிறையிலேயே தனது வாழ்க்கையை கழித்துள்ளார். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    என்ன நடந்தது!

    ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் 2004ஆம் ஆண்டு கமலா, சோன்பரி, ரத்னாய் ஆகிய மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அர்ஜுன் ஜானி என்பவர் கைது செய்யப்பட்டு, பின்னர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பின் முக்கிய ஆதாரமாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே ஒரு சாட்சி மட்டுமே இருந்தார். அவர் அதிகாலை 1 மணி அளவில் அர்ஜுன் ஜானி, ரத்னாயை தாக்கியதை பார்த்ததாக கூறினார்.

    ஆனால், அதே நேரத்தில் அந்த பகுதியை கடந்தபோது மற்ற இரண்டு பெண்களின் உடல்களை பார்க்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த சாட்சியின் அடிப்படையில், அர்ஜுன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து அர்ஜுன் ஜானி, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், தாமதமாக மேல்முறையீடு செய்ததாக கூறி, விசாரிக்காமலேயே மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போதே அவர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார்.

    Advertisement

    வழக்கு விசாரணை

    அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தை நாடினார். அப்போதே அவர் சுமார் 3,703 நாட்கள் சிறையில் இருந்தார். அதன் பிறகே மேல்முறையீடு செய்யப்பட்டது. தாமதமான மேல்முறையீடு தான் என்றாலும் குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே பல ஆண்டுகள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு, தாமதத்தை மன்னித்து உச்சநீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.கே. சிங், ஜே.பி. பார்டிவாலா, கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, "வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்து, சித்ரவதை மூலம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று, அதையே அடிப்படையாக வைத்து தண்டனை வழங்குவது நீதியின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    Advertisement

    ஏகப்பட்ட குளறுபடிகள்

    இந்த வழக்கின் விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. அர்ஜுன் ஜானி மீது மட்டுமே ஏன் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றும் அர்ஜுனை தாக்கியே போலீசார் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளனர் என்பதால் சட்டப்படி ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், உறுதியான ஆதாரம் இன்றி ஒருவரின் 22 ஆண்டு வாழ்க்கை பறிக்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

    முரணான தகவல்

    மேலும், கொலையில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கல் மீட்கப்பட்ட விதம் தொடர்பாக சாட்சிகளின் வாக்குமூலத்திற்கும், விசாரணை அதிகாரியின் விளக்கத்திற்கும் இடையே முரண்பாடுகள் இருந்ததாகவும் நீதிமன்றம் கூறியது. ஒரே ஒரு சாட்சி மட்டுமே சம்பவத்தை நேரில் பார்த்ததாக வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், அதிலும் கூட பல முரண்பாடுகள் இருந்ததாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

    Advertisement

    நீதிபதிகள் மேலும், "நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கலாம். ஆனால், அந்த சாட்சி நம்பகமானதாகவும், எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான வாக்குமூலத்தை தரும் சாட்சியாக இருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் அப்படி இல்லை. முன்னுக்கு பின் முரணான சாட்சியாகவே அது இருந்தது" என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

    விடுவிக்க உத்தரவு

    குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாகக் கூறி, அர்ஜுன் ஜானியை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தது. மேலும், அர்ஜுன் ஜானி மீண்டும் நார்மலான ஒரு வாழ்க்கைக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    English Summary

    Supreme Court acquitted a man who spent 22 years in prison in a triple murder case(22 ஆண்டுகள் சிறையில் இருந்தவரை விடுவித்த உச்ச நீதிமன்றம்): Supreme Court latest news in tamil.