தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்.. செல்வப்பெருந்தகை தூக்கியடிப்பு

  • சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூரை காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. தற்போதைய தலைவர் செல்வப்பெருந்தகைக்கு பதிலாக அவர் பொறுப்பேற்க உள்ளதாகவும், இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    Advertisement

    தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றவர்களில் செல்வப்பெருந்தகையும் ஒருவர் ஆவார்.

    Advertisement

    செல்வப்பெருந்தகை தூக்கியடிப்பு!

    சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போதே, தேர்தல் முடிவுக்கு பிறகு தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன் என்று செல்வப்பெருந்தகை கூறி வந்தார். தேர்தல் முடிவுக்கு பிறகு அரசியல் சூழலும் மாறிவிட்டதால், அவரை மாற்ற கட்சி மேலிடமும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே மாணிக்கம் தாகூர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பியாக இருக்க கூடிய மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனே அமலுக்கு வருவதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். செல்வப்பெருந்தகையின் பங்களிப்பை பாராட்டுவதாகவும் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

    Advertisement

    ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்

    தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பே மாணிக்கம் தாகூர் குரல் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தொடர்ந்து பேசி வந்தார். மாணிக்கம் தாகூரை பொறுத்தவரை ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக பார்க்கப்படுவார். மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் என காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் பயணித்து வருகிறார். தனது சரவெடி பேச்சுகளால் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தக்கூடியவர் மாணிக்கம் தாகூர்.

    தற்போது தமிழகத்தில் அரசியல் களம் மாறியுள்ள நிலையில், கட்சியை வளர்த்தெடுக்கும் விதமாக மாணிக்கம் தாகூரை நியமனம் செய்யும் முடிவுக்கு காங்கிரஸ் தலைமை இந்த முடிவுக்கு வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழக வெற்றிக்கழகம் கட்சி ஆட்சி அமைந்துள்ள நிலையில், அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், மாணிக்கம் தாகூரின் நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    Advertisement

    விஜய்க்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

    சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தாலும் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை விஜய்யை தொடர்ந்து விமர்சித்து வந்தார். சட்டமன்றத்தில் விஜய் உரை குறித்தும் விமர்சித்து இருந்தார். அதாவது, சட்டசபையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை போன்று விஜய் கை சைகை வைத்து பேசியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

    கூட்டணியில் இருந்து கொண்டே செல்வப்பெருந்தகை விமர்சித்தது காங்கிரஸ் கட்சியை தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில்தான், செல்வப்பெருந்தகைய பதவியில் இருந்து தூக்கியடிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் இன்னும் ஓரிரு நாளில் சத்தியமூர்த்தி பவன் வந்து பொறுப்பேற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

    English Summary

    Manickam Tagore: The Congress high command has appointed Manickam Tagore as the new President of the Tamil Nadu Congress Committee, replacing Selvaperunthagai. The party announced that the appointment takes immediate effect, marking a key organisational change in the state unit.