டெல்லி: நாடு முழுவதும் 2024-25ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் ஒருவர் கூட கையால் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடவில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறியிருந்த நிலையில், இதை சஃபாய் கர்மச்சாரி அந்தோலன் என்ற அமைப்பு மறுத்துள்ளது. இப்போதும் நாட்டின் பல மாவட்டங்களில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் முறை தொடர்வதாக கூறியுள்ள அந்த அமைப்பு இதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மனித மலத்தை கையாள் அள்ளும் முறை குறித்து மத்திய அரசு சில தகவல்களை கூறியிருந்தது. அதில் 2024-25ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் ஒருவர் கூட கையால் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடவில்லை என மத்திய அரசு கூறியிருந்தது.
இதற்கிடையே நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சஃபாய் கர்மச்சாரி அந்தோலன் என்ற அமைப்பு இது குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இந்த வேலையில் ஈடுபட்டுள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களை டெல்லிக்கு வரவழைத்த அந்த அமைப்பு, இந்த நான்கு மாநிலங்களில் மட்டும் குறைந்தது 46 மாவட்டங்களில் சுகாதாரமற்ற கழிப்பறைகளில் இருந்து மனித கழிவுகளை கையால் அகற்றும் நடைமுறை தொடர்வதாக தெரிவித்தது. கழிப்பறைகளில் இருந்து பெண்கள் மனிதக் கழிவுகளை அகற்றும் போட்டோக்கள் தங்களிடம் ஆதாரமாக இருப்பதாக அந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் இணை நிறுவனருமான பெஸ்வாடா வில்சன் தெரிவித்தார். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் புதிய கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இந்த சட்டவிரோத நடைமுறையை 60 நாட்களுக்குள் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த போவதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு அடுத்த இரண்டு மாதங்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சஃபாய் கர்மச்சாரி அந்தோலன் அமைப்பு, தன்னுடைய குழுக்களை கொண்டு சுயமாக கணக்கெடுப்பு நடத்தி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிக்கை வெளியிடும் என வில்சன் கூறினார். அந்த அறிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நீதித்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் மனிதக் கழிவுகளை கையால் அகற்றும் நடைமுறையை மொத்தமாக ஒழிக்க 'INDIA @ 80' என்ற ஓராண்டு பிரசாரமும் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் லோகூர், சுதான்ஷு துலியா மற்றும் முன்னாள் பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பாக முன்னாள் நீதிபதி மதன் லோகூர், "தீண்டாமையை என்பது அரசியலமைப்பு ரீதியாக ஒழிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட போதிலும், மனிதக் கழிவுகளை அகற்றும் நடைமுறை தொடர்வது கவலைக்குரியது. இப்படியொரு பிரச்சனை இருப்பதையே அதிகாரிகள் மறுப்பது மிகவும் கவலைக்குரியது. அதை முடிவுக்கு கொண்டு வருவது அரசின் முன்னுரிமையாக தெரியவில்லை. உலர் கழிப்பறைகள் எங்கு இருந்தாலும் அவற்றை அகற்றுவது அரசின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும். மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் முக்கிய பகுதியாக இது இருக்க வேண்டும்" என்றார். ஜம்மு- காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தை சேர்ந்த 35 வயதான முஸாஃபர் அகமது ஷேக், தனது குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக இந்த பணியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தார். தனது சமூகத்தினர் தீண்டாமைக்கு உள்ளாவதாகவும், அவர்களது வீடுகள் தனியாக ஒதுக்குப்புற பகுதியில் அமைந்துள்ளதாகவும் கூறினார். இந்த அடையாளத்தில் இருந்து நான் விடுபட வேண்டும் என்றும் தனது மகன் ஒருபோதும் இந்த வேலையை செய்யக்கூடாது என்றும் அவர் கூறினார். ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், "2024-25ஆம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் புதிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் கையால் மனித கழிவுகளை அகற்றுபவர் ஒருவர் கூட கண்டறியப்படவில்லை. அதேநேரம் 2013 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற முந்தைய இரண்டு கணக்கெடுப்புகளில் 58,098 பேர் மனித கழிவுகளை கையால் அகற்றும் வேலை செய்து கொண்டு இருந்தது கண்டறியப்பட்டது" என்றார். மேலும் அப்போது 'manual scavenging' மற்றும் 'hazardous cleaning' ஆகியவை இரண்டுமே வெவ்வேறு என சொல்லி அதற்கும் மத்திய அரசு விளக்கியுள்ளது. அதாவது மனித கழிவுகளை சுகாதாரமற்ற கழிப்பறைகளில் இருந்து கையால் அகற்றுவது மட்டுமே manual scavenging எனவும், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் இன்றி கழிவுநீர் கால்வாய் அல்லது செப்டிக் டேங்கை கையால் சுத்தம் செய்வது hazardous cleaning எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.மறுப்பு
கணக்கெடுப்பு
நீதிபதி கருத்து
மத்திய அரசு விளக்கம்