மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்!

  • டெல்லி: கர்நாடகாவில் இப்போது டிகே சிவக்குமார் முதல்வராகப் பதவியேற்றுள்ள நிலையில், காவிரி விவகாரம் மீண்டும் வெடித்துள்ளது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணையைக் கட்டியே தீருவேன் என அடம்பிடிக்கும் சூழலில், தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதில் இரு மாநிலங்களிலும் இருக்கும் காங்கிரஸ் கட்சியே இடியாப்பச் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

    Advertisement

    2026 என்பது காங்கிரஸ் கட்சிக்கு மறுமலர்ச்சி மற்றும் உத்வேகத்தைக் கொடுக்கும் ஆண்டாகவே பார்க்கப்படுகிறது. கேரளாவில் அசுர வெற்றி, தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் தவெக அரசுடன் கூட்டணி ஆட்சியில் பங்கு, கர்நாடகாவில் முதல்வர் பஞ்சாயத்தை ஒருவழியாக முடிவுக்குக் கொண்டு வந்தது எனக் காங்கிரஸ் குஷியாகவே இருந்தது.

    Advertisement

    மேகதாது

    ஆனால், அந்தக் குஷியெல்லாம் சில நாட்கள்கூட நீடிக்கவில்லை. 'மேகதாது அணை' விவகாரம், காங்கிரஸ் கட்சியின் இரண்டு மாநில யூனிட்டுகளையும், கூட்டணி ஆட்சிக் கணக்கையும் காலி செய்வதாக இருக்கிறது. கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமார், மேகதாது அணை விவகாரத்தில் எடுத்த அதிரடி முடிவுதான் இந்த ஒட்டுமொத்தப் புயலுக்கும் காரணம்.

    டிகே சிவக்குமார்

    இது தொடர்பாக அவர், "பெங்களூரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யவும், 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகிவிட்டது. இதற்கான திட்ட அலுவலகமும் திறக்கப்பட்டு, நீரில் மூழ்கப்போகும் வனப்பகுதிக்கு மாற்றாக மாற்று நிலமும் அடையாளம் காணப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக மேகதாதுவில் பூமி பூஜை நடத்தப்படும்!" என்றார்.

    Advertisement

    மேலும், காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு 177 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்ற உத்தரவு தெளிவாக உள்ளது என்றும், மேகதாது அணை கட்டுவதற்குத் தடை விதிக்கத் தமிழ்நாட்டிற்கு எந்த உரிமையும் இல்லை என உச்ச நீதிமன்றமே கூறிவிட்டதாகவும் கர்நாடகா வாதிடுகிறது.

    விஜய்

    கர்நாடகாவின் இந்த தன்னிச்சையான முடிவுக்குத் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சரான விஜய் மிகக் கடுமையான எதிர்வினையாற்றியுள்ளார். உடனடியாகக் காவிரி நீர் மேலாண்மை நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர் விஜய், தமிழ்நாட்டின் உரிமைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காக்க உடனடியாக அடுத்தகட்டச் சட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்.

    Advertisement

    அதோடு நிறுத்தாமல், நேராக டெல்லிக்குப் பறந்த முதல்வர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். முன்னதாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் பட்டியலில் இந்த மேகதாது அணை இல்லை.

    காவிரி படுகை என்பது ஏற்கனவே தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள ஒரு படுகை என்று கண்டறியப்பட்டு, இருக்கும் தண்ணீரே மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்க, கர்நாடகா புதிய அணையைக் கட்ட முற்படுவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அப்பட்டமாக மீறும் செயலாகும். எனவே, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியின்றி இந்தத் திட்டத்திற்கு மத்திய ஜல் சக்தி அமைச்சகமோ, மத்திய நீர் ஆணையமோ எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது!" என்று கூறியிருந்தார்..

    Advertisement

    காங்கிரஸ்

    மாநிலங்களுக்கு இடையேயான இந்த பிரச்சனை, இப்போது தவெக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸிற்குள் பூசலாக உருவெடுத்துள்ளது. கர்நாடகாவில் இந்த அணைத் திட்டம், முதல்வர் டி.கே.சிவக்குமாரின் மிக முக்கிய வாக்கு வங்கியான வொக்கலிகா சமூக விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு இணைந்து இருக்கிறது. அதனால், அங்குள்ள காங்கிரஸ் அதை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. ஆனால், தமிழ்நாட்டிலோ நிலைமை தலைகீழ்! தமிழ்நாட்டில் தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் காங்கிரஸ், தமிழக விவசாயிகளின் நலனுக்காக மேகதாது அணைக்கு எதிராக நிற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    வெடிக்கும் மோதல்?

    இந்த விரிசல் கடந்த ஜூன் 4 அன்று நடந்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பதவியேற்பு விழாவிலேயே வெளிச்சத்திற்கு வந்தது. மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் பிடிவாதத்தைக் கண்டித்தே தமிழகக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அந்தப் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்ததாகச் சொல்லப்படுகிறது. அதேபோல், தமிழகக் காங்கிரஸ் துணைத் தலைவர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லாவும், "காவிரியின் குறுக்கே எந்த ஒரு புதிய அணையும் கட்டக் கூடாது.. கர்நாடகாவிற்கு எதிராகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தனது சொந்தக் கட்சி ஆளும் அரசுக்கு எதிராகவே குரல் கொடுத்தார்.

    Advertisement

    ஒரு மாநிலத்தில் நேரடியாகவும் மற்றொரு மாநிலத்தில் ஆட்சியில் பங்கெடுத்திருக்கும் காங்கிரஸ், இந்த மேகதாது நீர் அரசியல் சுனாமியிலிருந்து தப்பித்து, தங்களின் தேர்தல் ஆதாயங்களையும் கூட்டணிக் கணக்குகளையும் எப்படிக் காப்பாற்றப் போகிறது என்பதுதான் தற்போதைய கேள்வி!

    English Summary

    Cauvery water dispute has flared up again as newly sworn-in Karnataka Chief Minister DK Shivakumar pushes for the Mekedatu dam project(மேகதாது விவகாரத்தில் குழப்பத்தில் காங்கிரஸ்): Mekedatu Dam Dispute latest news in tamil.