டெல்லி: மிஸ் புனே அழகி பட்டம் வென்றிருந்த ட்விஷா சர்மா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டிருந்தார். வரதட்சணைக் கொடுமை காரணமாகவே அவரது மகள் தற்கொலை செய்து கொண்டதாக ட்விஷா சர்மா புகாரளித்திருந்தார். இருப்பினும், அதை மறுக்கும் மாமியார், ட்விஷாவுக்கு போதைப் பொருள் எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்ததாகப் பரபர புகாரை முன்வைத்துள்ளார்.
நொய்டாவை சேர்ந்த முன்னாள் 'மிஸ் புனே' அழகியும், தெலுங்குத் திரைப்பட நடிகையுமான ட்விஷா சர்மாவின் (33) மரணம், மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மே 12 அன்று போபாலில் உள்ள கணவர் வீட்டில் ட்விஷா தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
ட்விஷா சர்மாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கணவர் சமர்த் மற்றும் மாமியார் கிராபாலா சிங் ஆகியோர் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், ஓய்வுபெற்ற நீதிபதியான மாமியார் கிராபாலா சிங், உயிரிழந்த மருமகள் மீது சில பகீர் புகார்களை முன்வைத்து இருக்கிறார். ட்விஷாவுக்கு மனநலப் பாதிப்பு இருந்ததாகவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் அவர் கூறியிருக்கிறார். செய்தியாளர்களைச் சந்தித்த மாமியார் கிராபாலா சிங், ட்விஷாவின் மரணம் தொடர்பாகப் பல கருத்துகளைக் கூறியுள்ளார். ட்விஷாவுக்குக் கஞ்சா உபயோகிக்கும் பழக்கம் இருந்ததாகவும், கர்ப்பமாக இருந்த காலத்தில் கூட அவர் அதிகளவில் கஞ்சா பயன்படுத்தியதைத் தன்னிடம் ஒப்புக்கொண்டார் என்றும் கூறியுள்ளார். அவரது கைகளில் ஏற்பட்ட நடுக்கம், போதைப்பொருளைச் சட்டென நிறுத்தியதால் ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். ட்விஷாவுக்கு 'சிசோஃப்ரினியா' போன்ற தீவிர மனநலப் பாதிப்பு இருந்ததாகவும், அதற்கான மாத்திரைகளை அவர் உட்கொண்டு வந்தார் என்றும் கூறியுள்ளார். மேலும், மே 7ம் தேதி ட்விஷா அவராகவே முன்வந்து கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டதாகவும், பின்னர் அவரே அதை நினைத்து வருந்தியதாகவும் தெரிவித்துள்ளார். ட்விஷாவின் அழகான தோற்றத்தை வைத்து அவரது பெற்றோர்கள் சிறுவயதிலேயே அவரை கிளாமர் உலகிற்குள் தள்ளிப் பணம் சம்பாதித்தனர் என்றும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். கடந்த 5 மாதங்களாக அவர்கள் ட்விஷாவைப் பார்க்க வரவே இல்லை என்றும் சாடியுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள ட்விஷாவின் தந்தை நவநிதி சர்மா, தனது மகளின் மரணத்திற்கு வரதட்சணைக் கொடுமையே காரணம் என ஆணித்தரமாகக் கூறுகிறார். இது தொடர்பாக அவர் மேலும், "இன்றைய காலத்தில் யாரும் ஓப்பனாக வரதட்சணை கேட்பதில்லை. அதற்குப் பதிலாக, நம் பாக்கெட்டில் இருந்து பணத்தைப் பிடுங்குவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவார்கள். அப்படித்தான் ட்விஷாவின் திருமணச் செலவுகள் மற்றும் அவர்களின் அந்தஸ்திற்கு ஏற்பப் பணம் கேட்டு மறைமுகப் பிரஷர் கொடுத்தார்கள் ட்விஷாவுக்கு மாடலிங் மற்றும் நடிப்பு மூலம் நல்ல வருமானம் இருந்தது. ஆனால், சமீபத்தில் வேலை இழந்தவுடன், 'உனக்கு யார் சோறு போடுவது?' என்று அவளது கணவனும் மாமியாரும் மிகக் கேவலமாகத் தரக்குறைவாகப் பேசத் தொடங்கினர். அதுவே என் மகளை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. ட்விஷாவின் கணவர் சமர்த் ஒரு ஆட்டுத் தோலைப் போர்த்திய ஓநாய்.. இவர்களது முதல் மருமகளும் கூட கொடுமை தாங்காமல் தான் விவாகரத்து பெற்றுச் சென்றுள்ளார். அன்று பல வாக்குறுதிகளைக் கொடுத்துத் தான் என் மகளைத் திருமணம் செய்தனர், ஆனால் எதையும் செய்யவில்லை" எனத் தன் ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார். நொய்டாவைப் பூர்வீகமாகக் கொண்ட ட்விஷா சர்மா, எம்பிஏ பட்டதாரி ஆவார். 2009-2012 காலகட்டத்தில் மாடலிங் துறையில் நுழைந்தவர், தனது கடின உழைப்பால் 'மிஸ் புனே' அழகிப் பட்டத்தை வென்றார். இதன் மூலம் விளம்பரங்கள் மற்றும் திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தன. தெலுங்கில் 'முக்குரு மொனகல்லு' என்ற திரைப்படத்திலும், 2018ல் 'ஜரா சம்பல் கே' என்ற குறும்படத்திலும் அவர் நடித்துள்ளார். மாடலிங், நடிப்பு, டிஜிட்டல் கிரியேட்டர் எனப் பல வேலைகளைச் செய்து வந்தார். தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.ட்விஷா சர்மா
மனநலப் பாதிப்பு
வரதட்சணை
யார் இந்த ட்விஷா சர்மா?