CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!

  • டெல்லி: ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு CBSE 12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியை டெண்டர் விட வேண்டும் என்பதற்காக, செய்யப்பட்ட மாற்றம் காரணமாக விடைத்தாள்கள் மொபைலில் ஸ்கேன் செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் சுமார் 18.5 லட்சம் மாணவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியிருப்பதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார்.

    Advertisement

    சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வுத் தாள்கள் மதிப்பீட்டு முறைகேடு விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ நிர்வாகத்தின் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.

    Advertisement

    என்ன நடந்தது?

    பொதுவாக, சிபிஎஸ்இ போன்ற தேசிய அளவிலான வாரியங்கள் தங்களின் விடைத்தாள்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றும்போது கடுமையான பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றும். இதற்காக வெளியிடப்பட்ட தொடக்கக்கால டெண்டர் விதிகளின்படி, விடைத்தாள்களின் தையல்களைப் பாதுகாப்பாகப் பிரித்து, அதிநவீன தானியங்கி ரோபோடிக் ஸ்கேனர்கள் மூலம், மிகத் துல்லியமான தரத்தில் (குறைந்தபட்சம் 300 DPI) ஸ்கேன் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது.

    விடைத்தாளின் எந்தவொரு பக்கமும் விடுபட்டுவிடக் கூடாது மற்றும் திருத்தும்போது ஆசிரியர்களுக்கு எழுத்துக்கள் தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்தத் தொழில்முறை ஸ்கேனர்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டிருந்தன.

    Advertisement

    மொபைல் போன் ஸ்கேனிங்

    ஆனால், இந்த முறை டெண்டர் பெற்ற தனியார் நிறுவனம் (COEMPT Edutek), விடைத்தாள்களைப் பாதுகாப்பான தொழில்முறை ஸ்கேனர்கள் மூலம் ஸ்கேன் செய்வதற்குப் பதிலாக, சாதாரண மொபைல் போன்கள் மூலம் ஸ்கேன் செய்துள்ளதாக ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதன் காரணமாகவே, விடைத்தாள்களின் பிரதிகள் மங்கலாகவும், பல பக்கங்கள் விடுபட்டும், சில பக்கங்கள் ஸ்கேன் செய்யப்படாமலும் குளறுபடியாக மாறியுள்ளன. இவை வெறும் தற்செயலான தவறுகள் அல்ல. குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு டெண்டர் கிடைக்க வேண்டும் என்பதற்காக விதிகளைத் தளர்த்தியதன் விளைவாக நடந்த திட்டமிட்ட மோசடி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    ராகுல் குற்றச்சாட்டுக்கு காரணம்

    ராகுல் காந்தி இப்படி குற்றச்சாட்டுகளை அடுக்க காரணம் இருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு (COEMPT Edutek) இந்த டெண்டர் ஒப்பந்தத்தை வழங்குவதற்காக, ஆகஸ்ட் மாதம் சிபிஎஸ்இ தனது டெண்டர் விதிகளில் அதிரடி மாற்றங்களைச் செய்தது.

    அதன்படி, ரோபோடிக் ஸ்கேனர் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாய விதி நீக்கப்பட்டு, சாதாரண ஸ்கேனர்கள் அனுமதிக்கப்பட்டன. அத்துடன் ஸ்கேனிங் தரமும் 200 DPI ஆகக் குறைக்கப்பட்டது.

    இந்த விதிமுறைத் தளர்வுகளைச் சாதகமாக்கிக் கொண்ட அந்த நிறுவனம், தேர்வு மையங்களிலேயே சாதாரண மொபைல் போன்களைக் கொண்டு, தகுந்த வெளிச்சமோ அல்லது தொழில்முறைத் தரமோ இன்றி விடைத்தாள்களை அவசர அவசரமாகப் படம் பிடித்து ஆன்லைனில் பதிவேற்றியுள்ளது அம்பலமாகியுள்ளது.

    Advertisement

    மாணவர்கள் பதிப்பு

    பாதுகாப்பற்ற மொபைல் போன் ஸ்கேனிங் முறையால் மாணவர்களின் விடைத்தாள்கள் ஆன்லைன் மதிப்பீட்டிற்குச் சென்றபோது, விடைத்தாள்களின் பக்கங்கள் சில விடுபட்டதாலும், மங்கலாக இருந்ததாலும் விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் பல கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்காமல் கடந்து சென்றுள்ளனர். இது ஒட்டுமொத்தமாக 18.5 லட்சம் மாணவர்களின் இறுதி மதிப்பெண்களைப் பாதித்து, அவர்களின் உயர்கல்வி எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

    பாதிக்கப்பட்ட மாணவர்

    இந்த மாபெரும் முறைகேட்டை வெளிக்கொண்டு வர, சார்த்தக் சித்தாந்த் என்ற 12-ஆம் வகுப்பு மாணவன் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் நடத்திய தனிப்பட்ட புலனாய்வு தான் முக்கியக் காரணமாக அமைந்தது என ராகுல் காந்தி கூறியுள்ளார். அந்த மாணவனின் தரவுகளை மேற்கோள் காட்டிப் பேசிய ராகுல் காந்தி, இந்த முறைகேட்டினால் சுமார் 18.5 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் மதிப்பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

    Advertisement

    மத்திய கல்வியமைச்சர்

    இவ்வளவு பெரிய குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வந்த பிறகும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்னும் தனது பதவியில் நீடிப்பது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளதுடன், இந்த ஒட்டுமொத்த விவகாரம் குறித்தும் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    English Summary

    Rahul Gandhi, the Leader of the Opposition in the Lok Sabha, has criticized a change implemented specifically to award the tender for the evaluation of CBSE Class 12 answer sheets to a particular firm; he alleged that, as a result of this change, the answer sheets were scanned using mobile phones, thereby jeopardizing the future of approximately 18.5 lakh students.