டெல்லி: எப்போதும் நமது நாட்டில் ஜூன் மாதம் தொடங்கும் பருவமழை ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருக்கும். ஆனால், இந்தாண்டு பருவமழை தாமதமாகவே ஆரம்பித்தது. அதன் பிறகு வெளுத்தாலும் கூட இப்போது மீண்டும் கப்சிப் மோடிற்கு போய்விட்டது. இதுபோல நடக்க என்ன காரணம். இனி பருவமழை இருக்குமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
பொதுவாக ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இந்தியாவில் பருவமழை உச்சத்தில் இருக்கும்.. ஒரு பக்கம் அரபிக்கடல் முழுவதும் மழை மேகங்களால் மூடப்பட்டிருக்கும்.. இன்னொரு பக்கம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் தொடர்ந்து உருவாகும்.. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கேப் விடாமல் மழை கொட்டும்.
ஆனால் நாம் இப்போது சாட்டிலைட் போட்டோக்களை பார்த்தால் நிலைமை வேறு விதமாக இருக்கிறது.. அரபிக்கடலும் வங்கக்கடலும் பெரும்பாலும் தெளிவாகக் காணப்படுகின்றன. மத்திய இந்தியாவிலும் கூட பல பகுதிகளில் மழை மேகங்களே இல்லை. இதைப் பார்த்தால் சில சாட்டிலைட் படத்தில் பிரச்சனை என கூட சொல்வார்கள். அந்தளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது. இதை வானிலை ஆய்வாளர்கள் மழை இடைவெளி என அழைக்கின்றனர். மத்திய மற்றும் தென் இந்தியாவின் பல பகுதிகளில் அடுத்த 6 முதல் 7 நாட்களுக்கு மழை குறைவாகவே இருக்கும் என வானிலை மையம் கூறியிருக்கிறது. பொதுவாகப் பருவமழை சீசனில் முக்கிய இயக்க சக்தியாக Monsoon Trough என்பது இருக்கும். இது வடமேற்கு இந்தியாவிலிருந்து வங்கக்கடல் வரை நீளும் குறைந்த காற்றழுத்தப் பகுதியாகும். இந்த Monsoon Trough தனது இயல்பான இடத்தில் இருக்கும்போது அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலிலிருந்து ஈரப்பதமுள்ள காற்றை இழுத்து வந்து மத்திய இந்தியாவில் பரவலாக மழையைக் கொடுக்கும். ஆனால், இப்போது இந்த Trough வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலை அடிவாரப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாகக் கிழக்கு உத்தர பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிக்கிம் போன்ற பகுதிகளில் அதிக மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் மத்திய இந்தியா மற்றும் தென் இந்தியாவின் பல பகுதிகள் மழையின்றி வறண்ட வானிலையே நிலவுகிறது. இந்த காலகட்டத்தில் மத்திய இந்தியாவின் மழைக்கு மற்றொரு முக்கிய காரணமாக வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் இருக்கும். இவை ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாகச் சென்று கனமழையைக் கொடுக்கும். ஜூலை முதல் வாரத்தில் ஏற்பட்ட கனமழைக்கும் இதுபோன்ற ஒரு தாழ்வுப் பகுதியே காரணமாக இருந்தது. ஆனால் தற்போது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் எதுவும் உருவாகவில்லை. இதுவும் மழையை காலி செய்துவிட்டது. இத்தோடு சேர்ந்து மழை சட்டன் பிரேக் போட சர்வதேச வானிலை சூழல்களும் காரணமாக உள்ளன. பசிபிக் பெருங்கடலில் காணப்படும் எல் நினோ மற்றும் தற்போது இந்தியாவுக்குச் சாதகமற்ற பகுதியில் இருக்கும் MJO ஆகியவையும் சேர்ந்து கொண்டு மழை மேகங்கள் உருவாவதையும் தடுக்கின்றன. மேலும், எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாகச் செயல்படும் Indian Ocean Dipole இப்போது நடுநிலை நிலையில் இருப்பதும் மழையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் பருவமழை இத்தோடு நின்று விடாது. இது ஒரு குட்டி பிரேக் என்றே வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஜூலை 16 முதல் 22ஆம் தேதிக்குள் வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகலாம் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அது உருவானால் Monsoon Trough மீண்டும் தனது இயல்பான இடத்துக்குத் திரும்பி மத்திய இந்தியா, மேற்குக் கடற்கரை மற்றும் தென் இந்தியாவின் பல பகுதிகளில் மழையை கொடுக்கும். மேலும், பருவமழையில் இதுபோல கேப் வருவது புதிய விஷயம் இல்லை. பெரும்பாலான ஆண்டுகளில் இதுபோன்ற கேப் இருக்கவே செய்யும். ஆனால், இந்தாண்டு ஜூன் மாதம் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி இருந்ததால்.. ஜூலை மாத மழையை எதிர்பார்த்து இருந்தனர். அதிலும் கேப் விழுந்துள்ளதே பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நெல், சோயாபீன், பருத்தி மற்றும் சோளம் போன்ற பயிர்கள் வளர்ச்சி நிலையில் இருப்பதால் அடுத்த வாரங்களில் பெய்யும் மழை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.சாட்டிலைட் போட்டோக்கள்
என்ன நடக்கிறது!
சர்வதேச வானிலை
புதிய விஷயம் இல்லை