அந்த தென்னிந்திய கட்சிக்கு மோடி அமைச்சரவையில் இடம் கன்பார்ம்.. பெரிய மாற்றம் வரப்போகுதாம்!

  • டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் நவம்பர் முதல் வாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அமைச்சரவையில் இருக்கும் சிலர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    அடுத்தாண்டு பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், குஜராத் என மொத்தம் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதை கருத்தில் கொண்டும் மோடி அமைச்சரவையில் முக்கியமான மாற்றம் வரக்கூடும் என சொல்லப்படுகிறது. இந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு கூடுதல் இடம் வழங்கப்படலாம்.

    Advertisement

    அமைச்சரவை மாற்றம்

    அது மட்டுமின்றி, மோடி 4.0 ஆட்சியில் உள்ள அமைச்சர்களின் செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த அமைச்சரவை மாற்றத்தில் கூட்டணி கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்றும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதில் கவனம் செலுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சகங்களின் பொறுப்புகளை சில அமைச்சர்கள் கவனித்து வரும் நிலையில், அவர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையிலும் பொறுப்புகள் மறுசீரமைக்கப்பட வாய்ப்புள்ளது. மத்திய அமைச்சரவையில் மொத்தம் 81 அமைச்சர்கள் வரை இடம்பெற முடியும் என்பதால் கூடுதலாக புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கான ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன.

    Advertisement

    தென் மாநிலங்கள்

    இந்த அமைச்சரவை மாற்றத்தில் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆந்திராவில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா ஆகிய கட்சிகளுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அண்மையில் சந்தித்தபோது, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது தெலுங்கு தேசம் சார்பில் இரண்டு பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். இந்த நிலையில், அமைச்சரவை மாற்றத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு கூடுதலாக ஒரு இடம் மற்றும் பவண் கல்யாணின் ஜனசேனாவில் இருந்தும் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனசேனாவுக்கு மூன்று மக்களவை உறுப்பினர்கள் உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் பவன் கல்யாணின் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

    Advertisement

    தெலுங்கானா

    தெலங்கானாவை பொறுத்தவரை, தற்போது மத்திய அமைச்சர்களாக உள்ள கிஷன் ரெட்டி மற்றும் பண்டி சஞ்சய் ஆகியோர் தொடர்ந்து அதே பொறுப்புகளில் நீடிப்பார்கள் என தெரிகிறது. இதற்கிடையே பாஜகவின் தேசிய குழுவில் அண்மையில் தெலுங்கானாவுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காத நிலையில், அந்த மாநிலத்தை ர்ந்த மேலும் ஓரிருவருக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    கூட்டணி கட்சிகள்

    அதேபோல பீகாரில் உள்ள நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சியில் இப்போது இருவர் மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். அதன் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என தெரிகிறது. தமிழ்நாட்டில் இருந்து மத்திய இணை அமைச்சராக இருந்த எல் முருகன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்த முறை தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதில் கேள்வியே நிலவுகிறது.

    Advertisement

    எனினும், யாருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. நவம்பர் முதல் வாரத்தில் மாற்றங்கள் நடைபெறலாம் என்ற தகவல்களுக்கு மத்தியில், தென்னிந்தியாவில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கே கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என தெரிகிறது.

    English Summary

    Prime Minister Narendra Modi is reportedly considering a cabinet reshuffle in the first week of November(மோடி அமைச்சரவையில் வரப்போகுது மெகா மாற்றம்): Modi Cabinet Reshuffle latest news in tamil.