டெல்லி: 72வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் 3 தேசிய விருதும், விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்துக்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் இன்று 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த 2024ம் ஆண்டின் ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திடம் சென்சார் சான்று வாங்கிய திரைப்படங்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி தமிழ் திரைப்படங்கள் தேசிய விருதுகளை வாங்கி குவித்துள்ளன. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்துக்கு 3 தேசிய விருதுகளும், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்துக்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. * அதன்படி சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது அமரன் படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு அறிவிப்பு * அமரன் படத்தின் எடிட்டர் கலைவாணனுக்கு சிறந்த எடிட்டிங்கிற்கான தேசிய விருது அறிவிப்பு * அமரன் திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிப்பு * சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான தேசிய விருது 'மகாராஜா' படத்தின் அனல் அரசுக்கு அறிவிப்பு * சிறந்த துணை நடிகையாக 'மகாராஜா' படத்தில் நடித்த சச்சனா நமிதாஸ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மகாராஜா திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடித்துள்ளார். அதேபோல் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' திரைப்படத்துக்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த நடிகருக்கான (சிறப்பு பிரிவு) தேசிய விருது தனுஷ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சமூக விழிப்புணர்வு திரைப்படமாகவும், சமூக, தேசிய நலன் பிரிவில் கேப்டன் மில்லர் திரைப்படத்துக்கு ஒரு தேசிய விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைக்க உள்ளது. இதுதவிர நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை பெற்றுள்ளது. மேலும் சிறந்த வசனத்திற்கான தேசிய விருது 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த விருதை வசனகர்த்தா வெங்கி அட்லூரிக்கு கிடைக்க உள்ளது. அதேபோல் சிறந்த ஒலிக்கலவைக்கான தேசிய விருது மெய்யழகன் படத்தில் பணியாற்றிய நரேனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.