பாஜகவை ஆதரிக்கும் திமுக? நாடாளுமன்றத்தில் வரப்போகும் மாற்றம்.. என்டிஏ சிக்கல் தீர்ந்துடுமாம்

  • டெல்லி: லோக்சபா உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543ல் இருந்து சுமார் 850 ஆக உயர்த்துவது மற்றும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை 2029 தேர்தலுக்கு முன்பே அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு புதிய அரசியலமைப்பு திருத்த மசோதாவை வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு இன்னுமே சில சிக்கல் உள்ளன. அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 20ம் தேதி முதல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்தாண்டு மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நம்பர் கேம்

    குறிப்பாக நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் எண்ணிக்கையை உயர்த்துவது, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை 2029 தேர்தலுக்கு முன்பே அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு புதிய அரசியலமைப்பு திருத்த மசோதாவை லோக்சபாவில் கொண்டு வருவது உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்றவுள்ளது. இந்த மசோதாக்களை மழைக்கால கூட்ட தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஆனால், இந்த மசோதாவை நிறைவேற்ற இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இந்த 3ல் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவும் அவசியமாகியுள்ளது.

    Advertisement

    ஏன் இந்த மசோதா முக்கியம்?

    2023 நிறைவேற்றப்பட்ட நாரி சக்தி வந்தன் சட்டத்தின் மூலம்.. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டது. ஆனால், அந்த இட ஒதுக்கீடு மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை முடிந்த பிறகே அமலுக்கு வரும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் முழுமையாக முடிவடையாததால்.. பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    தற்போது லோக்சபாவில் என்டிஏ கூட்டணிக்கு 293 எம்பிக்கள் உள்ளனர். சில எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆளும் அணிக்கு ஆதரவு அளித்தால் அந்த எண்ணிக்கை 319 ஆக உயரலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற 360 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். அதாவது, என்டிஏவுக்கு இன்னும் 41 எம்.பி.க்களின் ஆதரவு அவசியமாகிறது. ராஜ்யசபாவிலும் இதேபோல், என்டிஏவிடம் தற்போது 152 உறுப்பினர்கள் உள்ள நிலையில், மசோதாவை நிறைவேற்ற 161 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

    திமுகவின் நிலைப்பாடு என்ன?

    இந்த விவகாரத்தில் திமுகவின் ஆதரவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. லோக்சபாவில் 22 எம்பிக்களை கொண்டுள்ள திமுக, தொகுதி மறுவரையறையில் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய நிலையில் தொடர வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கையாக உள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதே திமுக வாதமாகும்.

    Advertisement

    சர்ச்சை ஏன்?

    இந்திய அரசியலமைப்பின் 81-வது பிரிவு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் மக்கள்தொகைக்கு ஏற்ப லோக்சபா இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை 1976ல் முடக்கி வைக்கப்பட்டது. பின்னர் 2001ல் அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு அதை 2026 வரை நீட்டித்தது.

    இந்த முடக்கம் நீட்டிக்கப்படாவிட்டால், அடுத்த தொகுதி மறுவரையறை சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடைபெறும். அப்படி நடந்தால், மக்கள் தொகை வேகமாக அதிகரித்துள்ள உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கலாம். அதேநேரத்தில், மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்ற அச்சம் தென் மாநிலங்களில் உள்ளது.

    Advertisement

    மத்திய அரசு திட்டம்

    மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையை மேலும் சில ஆண்டுகள் அப்படியே தொடரும் வகையில் அரசியலமைப்பில் மீண்டும் திருத்தம் செய்யப்படலாம். அதேநேரத்தில், தொகுதிகளை மட்டும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மறுவரையறை செய்யும் வாய்ப்பும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது மாநிலத்தின் ஒட்டுமொத்த தொகுதிகள் எண்ணிக்கை மாறாது. அதேநேரம் அதில் இருக்கும் தொகுதிகள் மாற்றப்படலாம்.

    இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை விரைவாக அமல்படுத்துவதோடு, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சத்தையும் ஓரளவு தீர்க்க முடியும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.

    English Summary

    NDA government is considering a fresh Constitutional Amendment Bill to implement women's reservation before the 2029 Lok Sabha elections(நாடாளுமன்றத்தில் நம்பர் கேம் ஆடும் பாஜக அரசு): NDA Numbers Challenge latest news in tamil.