அடிச்சு தூக்கும் பாஜக.. ராஜ்யசபாவில் NDA கூட்டணி பலம் அதிகரிக்கிறது.. இன்னும் வெறும் 13 தான்!

  • டெல்லி: நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி தேர்தல் நடைபெற்ற 26 இடங்களில் 19 இடங்களை வென்றது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. மாநிலங்களவையில் 3ல் இரண்டு பங்கு பலத்தை பெற 13 எம்.பிக்கள் மட்டுமே தற்போது குறைவாக உள்ளனர்.

    Advertisement

    தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இருந்து மொத்தம் காலியாக உள்ள 26 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், 24 இடங்களில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் உள்ளிட்ட 24 பேர் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    Advertisement

    மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. மீனாட்சி நடராஜன் தனது வேட்பு மனு பிரமாணப் பத்திரத்தில், தெலுங்கானாவில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு குறித்த விவரங்களை மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதனால், அங்குள்ள 3 மாநிலங்களவை இடங்களையும் பாஜக கைப்பற்றியது.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 19 இடங்களைக் கைப்பற்றியது. 5 இடங்களை காங்கிரஸ் கட்சி வென்றது. என்டிஏ வென்ற 19 இடங்களில், 16 இடங்கள் ஏற்கனவே அந்தக் கூட்டணியின் வசம் இருந்தவை. எனவே, ராஜ்யசபாவில் அதன் பலம் மூன்று இடங்கள் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் வென்ற ஐந்து இடங்களில், நான்கு இடங்கள் ஏற்கனவே அக்கட்சியிடம் இருந்தவை. தமிழகத்தில் தவெக எம்.பியாக வாய்ப்பிருந்த சீட்டை காங்கிரஸ் பெற்றுக் கொண்டது. அந்த இடத்திற்கு போட்டியிட்ட பிரவீன் சக்ரவர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    Advertisement

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து 2 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் அம்மாநிலத்தை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற முடியும். ஜேஎம்எம் சார்பில் ஒருவரும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும் களமிறங்கினர். பாஜக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் களமிறங்கினார்.

    தேர்தலில், ஜேஎம்எம் வேட்பாளர் பைஜ்நாத் ராம் 30 வாக்குகளைப் பெற்று எளிதாக வெற்றி பெற்றார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் பிரணவ் ஜா 19 ஓட்டு மட்டும் பெற்று தோல்வி அடைந்தார். 3 ஓட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் தோல்வி அடைய கூட்டணி கட்சிகள் மாற்றி ஓட்டுப் போட்டதே காரணம். பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளர் பரிமல் நத்வானி 28 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

    Advertisement

    இதன் மூலம், மொத்தம் தேர்தல் நடைபெற்ற 26 ராஜ்யசபா இடங்களில் என்.டி.ஏ கூட்டணி 19 இடங்கள், பாஜக ஆதரவுடன் சுயேட்சை ஒருவர், 5 இடங்களில் காங்கிரஸ் கட்சி, 1 இடத்தில் ஜே.எம்.எம் ஆகியவை வென்றுள்ளன. இதன் மூலம் மாநிலங்களவையில் என்.டி.ஏ கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது.

    சமீபத்திய தேர்தல் முடிவுகள் மாநிலங்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை 150 உறுப்பினர்களாக உயர்த்தியுள்ளன. 245 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்குத் தேவையான 163 இடங்களைப் பெறுவதற்கு இந்தக் கூட்டணிக்கு இப்போது இன்னும் 13 இடங்கள் குறைவாக உள்ளன.

    Advertisement

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பெரும் பிளவைத் தொடர்ந்து, மூன்று திரிணாமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்கள் ராஜினாமா செய்தது, என்.டி.ஏ கூட்டணி மேலும் பலம் பெறுவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.

    மேற்கு வங்கத்தில் நடைபெறும் மூன்று ராஜ்யசபா எம்.பிக்களுக்கான இடைத்தேர்தல்களிலும் ஆளும் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றால், அதன் பலம் 150-லிருந்து 153-ஆக உயர்ந்து, மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பெறுவதற்கு இன்னும் 10 இடங்கள் மட்டுமே தேவைப்படும்.

    சில வாரங்களுக்கு முன்பு, ஆம் ஆத்மி கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து மாநிலங்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் அதிகரித்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமைக்கு எதிராக ராகவ் சதா கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கி, 7 ராஜ்யசபா எம்.பி.க்களை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பக்கம் ஈர்த்தார்.

    Advertisement

    இந்த நிகழ்வுகள் ராஜ்யசபாவில் இந்தியா கூட்டணியின் செயல் பலத்தைக் குறைத்துள்ளன. எதிர்க்கட்சிக் கூட்டணியில் தற்போது ராஜ்யசபாவில் சுமார் 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    BJP-led NDA has moved closer to consolidating its position in the Rajya Sabha after winning 19 of the 26 seats decided in the latest round of elections. Further narrowing the gap towards a two-thirds majority in the Upper House.