டெல்லி: நீட் விவகாரம் இந்தாண்டு மிக பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. நீட் கேள்வித்தாள் முன்கூட்டியே லீக் ஆனது, தேர்வு ரத்து, மறுதேர்வு, சிபிஐ விசாரணை, கைதுகள் என பல திருப்பங்களை இது சந்தித்துள்ளது. இப்போது எதிர்க்கட்சிகள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தும் அளவுக்கு விவகாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த சர்ச்சை எப்படி தொடங்கியது? இது கடந்து வந்த பாதை குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த மே 3ஆம் தேதி தேசிய தேர்வு முகமை, நாடு முழுவதும் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு நீட் தேர்வை நடத்தியது. கேள்வித்தாள்கள் ஜிபிஎஸ் கண்காணிப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு, ஏஐ கேமராக்கள், சிக்னல் ஜாமர்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால் மறுநாள் அதாவது மே 6ம் தேதியே கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு கேள்வித்தாள் ராஜஸ்தானில் தேர்வுக்கு முன்பே பரவியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த மாடல் கேள்வித்தாளில் இருந்த பல கேள்விகள் நீட் தேர்வுடன் ஒத்துப்போனதாக தகவல்கள் பரவின. இதையடுத்து மே 7ம் தேதி இந்த புகார்கள் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அடுத்த நாளே சிபிஐ உட்பட மத்திய விசாரணை ஏஜென்சிகளின் உதவியும் கோரப்பட்டது. முதலில் கேள்வித்தாள் முழுமையாக லீக் ஆனதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றே அதிகாரிகள் கூறினர். இருப்பினும், ராஜஸ்தான் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. தேர்வுக்கு முன்பே மாடல் கேள்வித்தாளில் இருந்து சுமார் 135 கேள்விகள் நீட் தேர்வில் இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தில் 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், பலரும் கைது செய்யப்பட்டனர். முன்கூட்டியே கசிந்த வினாத்தாள் எத்தனை பேரிடம் சென்றது என்பது தெளிவாக தெரியவில்லை. இதையடுத்து மே 12ஆம் தேதி நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஜூன் 21ல் மறுதேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். இந்த விவகாரம் நாடாளுமன்ற நிலைக்குழுவிலும் எதிரொலித்தது. முழு வினாத்தாளும் கசியவில்லை.. சில கேள்விகள் மட்டுமே கசிந்திருக்கலாம் என தேர்வு முகமை விளக்கமளித்தது. ஆனால், பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதுள்ளது என்று தர்மேந்திர பிரதான் கூறினார். இரு தரப்பு விளக்கமும் முரணாக இருந்ததால் அப்போதே இது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. மறுபுறம் சிபிஐ விசாரணை வேகமெடுத்தது. மகாராஷ்டிராவை சேர்ந்த மருத்துவர் ஒருவர், பயிற்சி மைய ஆசிரியர் உள்ளிட்ட பலரை கைது செய்த சிபிஐ, இதுவரை இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் நீட் கேள்வித்தாள் லீக் ஆவதை தடுக்க.. மறுதேர்வை எழுத்து தேர்வாக இல்லாமல் கம்யூட்டர் வழியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் தேர்வு முறையை மாற்றுவது சாத்தியமில்லை என்று கூறிய நீதிமன்றம், வழக்கமான முறையிலேயே தேர்வு நடத்த அனுமதி கொடுத்தது. இதையடுத்து இதுவரை இல்லாத வகையில் மத்திய அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது. இந்திய விமானப்படை மூலம் கேள்வித்தாள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. டெலிகிராம் செயலி கூட தற்காலிகமாக முடக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் நீட் விவகாரம் தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சி குரல் கொடுத்தது. நீட் முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே அவர்கள் கோரிக்கையாகும். டெல்லியில் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில், சோனம் வாங்சுக்கின் காலவரையற்ற உண்ணாவிரதம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. நாளுக்கு நாள் மாணவர்கள் ஆதரவு இந்த போராட்டத்திற்கு அதிகரிக்கவே.. இப்போது அது தேசியளவில் மெகா பிரச்சனையாக வந்து நிற்கிறது.என்ன நடந்தது!
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
மறுதேர்வு
போராட்டம்