டெல்லி: நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் கரப்பான் பூச்சி கட்சி தலைமையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக 25 வயது இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கரப்பான் பூச்சி கட்சியினர், தவறான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தாலும் கிரிமினல் நடவடிக்கை எடுப்பது ஏற்க முடியாதது என்று கூறியுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாகவே கரப்பான் பூச்சி கட்சியினர் தலைமையில் நீட் முறைகேடுகளுக்கு எதிராக போராட்டம் நடந்தது. மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை தொடர்ந்தே இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கரப்பான் பூச்சி கட்சியினருக்கு மத்திய அரசு சில வாக்குறுதிகளை அளித்திருந்தது.
அதில் முக்கியமாக போராடிய மாணவர்கள் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படாது என மத்திய அரசு வாக்குறுதி கொடுத்திருந்தது. இதற்கிடையே டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 23ஆம் தேதி நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் கலந்து கொண்ட ரூச்சிகா சிங் என்ற இளம்பெண், பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது பேச்சு பிரதமர் பதவியின் கண்ணியத்தை அவமதிப்பதாகவும், சமூக அமைதியை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள எக்ஸ்பிரஸ்வே காவல் நிலையத்தில் ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, பொது அமைதியை பாதிக்கும் வகையிலான கருத்து பரப்புதல் மற்றும் அவதூறு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு, சம்பவம் நடைபெற்ற டெல்லி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கரப்பான் பூச்சியினர், கிரிமினல் விசாரணை நடத்தப்படக்கூடாது என்று கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியினர் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், "அந்த இளம்பெண் பயன்படுத்திய வார்த்தைகள் தவறாக இருக்கலாம். அது சிலருக்கு ஆட்சேபனைக்குரியதாக இருக்கலாம். ஆனால் அதற்காக அரசு இதுபோல கிரிமினல் நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது. யாராவது அவதூறாக பேசியிருந்தால், அவர்கள் விரும்பினால் சிவில் அல்லது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரலாம். ஆனால் போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீஸ் மூலம் கிரிமினல் நடவடிக்கையை எடுப்பதை ஏற்க முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகள் இளைஞர்களின் கருத்து சுதந்திரத்தின் மீது அச்சத்தை ஏற்படுத்தும். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று" என்று கூறினார். அதேநேரத்தில் இளைஞர்களும் தாங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சௌரவ் தாஸ் கேட்டுக்கொண்டார். அவர் மேலும், "இளைஞர்கள் யாரை பற்றியும் பேசும்போது வார்த்தைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். அதேநேரம் அரசியல் நோக்கங்களுக்காக போலீஸ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. போலீசார் அமைதியாக இருக்க வேண்டும். தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையே மாணவர் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது, குற்ற பின்னணி உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று டெல்லி அரசு நேற்றைய தினம் அறிவித்தது. இது குறித்து டெல்லி உள்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் கூறுகையில், "மாணவர்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். மாணவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். ஆனால், மாணவர் போராட்டத்தை பயன்படுத்தி வன்முறையில் ஈடுபட்ட குற்றப் பின்னணி கொண்ட சமூக விரோதிகள் மீது மட்டும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். உச்ச நீதிமன்றம் குற்ற பின்னணி உள்ளவர்களை தவிர மற்றவர்கள் மீது எந்தவொரு கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அறிவுறுத்தியிருந்தது. அதன்படியே டெல்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என அறிவித்துள்ளது.மத்திய அரசு
பின்னணி
வழக்கு போடுங்கள்
நடவடிக்கை இல்லை