போராட்டத்தை அறிவித்த கரப்பான் பூச்சி கட்சி.. நீதிபதியிடம் முறையிட்ட மத்திய அரசு வழக்கறிஞர்! ட்விஸ்ட்

  • டெல்லி: ஜந்தர் மந்தரில் நடந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைமையிலான மாணவர் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகளை ரத்து செய்ய கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இந்த கோரிக்கை நிறைவேற்றவில்லை என்பதை கண்டித்தே கரப்பான் பூச்சி கட்சி மீண்டும் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், இப்போது மத்திய அரசு அவசர அவசரமாக இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

    Advertisement

    கரப்பான் பூச்சி கட்சி சார்பில் நடந்த போராட்டத்தின் போது தர்மேந்திர பிரதான் ராஜினாமாவுடன் சேர்ந்து வேறு சில முக்கிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. தற்கொலை செய்து கொண்ட நீட் மாணவர்களுக்கு நிதியுதவி அளிப்பது, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

    Advertisement

    மத்திய அரசு

    இதை நிறைவேற்றாமல் மத்திய அரசு தாமதப்படுத்துவதாக சொல்லியே வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கரப்பான் பூச்சி கட்சி பேரணியை அறிவித்திருந்தது. இந்தச் சூழலில் தான். மாணவர் போராட்டங்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய கோரி, அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தை நாளை அவசர வழக்காகப் பட்டியலிடுமாறு சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, நாளை பட்டியலிட ஒப்புதல் அளித்தார்.

    முறையீடு

    இந்த விவகாரம் தொடர்பாக இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முறையிட்டார். அப்போது அவர், "ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்ய விரும்புகிறேன். அவசரமான விவகாரம் என்பதால் நாளையே பட்டியலிட அனுமதிக்க வேண்டும். மாணவர் போராட்டம் தொடர்பான எஃப்ஐஆர்களை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கும் விவகாரம் இது. அரசியலமைப்பு சட்டத்தின் 142வது பிரிவை நாங்கள் பயன்படுத்துகிறோம்" என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

    Advertisement

    நாளை விசாரணை

    இதற்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த், "சமரசத்திற்கு வந்திருந்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்று கூறினார். இதையடுத்து இந்த விவகாரத்தை நாளை விசாரணைக்கு பட்டியலிடுமாறு துஷார் மேத்தா கோரிக்கை விடுத்தார். அதற்கு தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.

    தேசிய அளவில் நடைபெறும் போட்டி தேர்வுகளில் தொடர்ந்து வினாத்தாள் லீக் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெறுவதாக கூறி, ஜூன் மாதம் கரப்பான் பூச்சி கட்சி சார்பில் மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர். இந்தப் போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். அவரது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நாடு முழுக்க கவனம் ஈர்த்தது.

    Advertisement

    நீட் போராட்டம் - பின்னணி

    கடந்த ஜூலை 20ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி "சன்சத் சலோ" பேரணியை நடத்த போராட்டக்காரர்கள் முயன்றனர். அவர்களை தடுக்க டெல்லி போலீசார் மற்றும் ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் தடியடி, கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பிறகும் போராட்டம் தொடர்ந்தது. நாடு முழுக்க போராட்டங்கள் பரவிய நிலையில், முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

    இருப்பினும், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பதும் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கையாக இருந்தது. அதை மத்திய அரசு நிறைவேற்ற மறுப்பதாக கரப்பான் பூச்சி கட்சி குற்றஞ்சாட்டி வந்த நிலையில் தான் இப்போது மத்திய அரசு நீதிமன்றத்தை அணுகியுள்ளது. நாளைய தினம் இந்த வழக்கில் முக்கியமான வாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Centre has approached the Supreme Court seeking cancellation of criminal cases and FIRs registered against students(நீட் தேர்வு தொடர்பாக நடந்த மாணவர் போராட்டம்): NEET Protest latest news in tamil.