நீட் யுஜி 2026: 5,440 சென்டர்கள், 1.38 லட்சம் சிசிடிவி கேமராக்கள்! முறைகேடுகளை தடுக்க அதிரடி ஏற்பாடு

  • டெல்லி: நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் யுஜி 2026 (NEET-UG 2026) மறுதேர்வு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. முன்னதாக நடைபெற்ற தேர்வில் எழுந்த சர்ச்சைகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்களைத் தொடர்ந்து, இந்த முறை எவ்விதத் தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில் தேசிய தேர்வு முகமை (NTA) மிகத் தீவிரமாக உள்ளது.

    Advertisement

    எனவே இந்த தேர்வுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் 551 நகரங்களில் உள்ள 5,440 சென்டர்கள், வெளிநாடுகளில் உள்ள 14 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. சுமார் 22.79 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.

    Advertisement

    சென்டர்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,38,560 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் நேரடி காட்சிகள் தேசிய, மாநில மற்றும் அமைச்சக அளவில் கண்காணிக்கப்படுகின்றன.

    முறைகேடுகளைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், மின்னணு சாதனங்கள் மூலம் காப்பியடிப்பதைத் தவிர்க்க 51,311 சிக்னல் ஜாமர்கள் நிறுவப்பட்டுள்ளன.

    மாணவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் முக அங்கீகார சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதற்காக 48,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தேர்வை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்த காவல்துறை, துணை ராணுவப் படைகள் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    Advertisement

    இன்று மதியம் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. மாணவர்கள் காலை 11:00 மணி முதல் மையங்களுக்கு வரத் தொடங்கினர். மதியம் 1:30 மணிக்கு மேல் எவரும் மையத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்.

    தேர்வு நடைமுறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், மாணவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் இந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

    English Summary

    NEET UG 2026: The NEET-UG 2026 re-examination for medical courses is being conducted today across the country amidst tight security. Following controversies and allegations of question paper leaks during the earlier exam, the National Testing Agency (NTA) is taking stringent measures to ensure that no irregularities occur this time.