டெல்லி: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான தேசிய கலந்தாய்வு ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில இடங்களுக்கான கலந்தாய்வு 13 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கு 72,627 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பின்படி மாநில ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஆகஸ்ட் 29ஆம் தேதிக்குள் முதல் சுற்றில் சேர வேண்டும் என தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதற்கட்டக் கலந்தாய்வு ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டின் முதல் சுற்றில் இடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் நேரில் சென்று சேர வேண்டும். மருத்துவம் சார்ந்த இளநிலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதியவர்களில் 61,306 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கு மொத்தம் 16,199 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.