டெல்லி: இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளுக்கும் சேர்த்து 'சீஃப் ஆஃப் டிஃபென்ஸ் ஸ்டாஃப்' (CDS) என்ற ஒரே ஒரு சுப்ரீம் தளபதி பதவி இருக்கிறது. இதுவரை அந்த பதவியில் இருந்த ஜெனரல் அனில் சௌஹான் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.
அவருக்குப் பதிலாக, இந்திய ராணுவத்தின் சீனியர் அதிகாரியான ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதேபோல், இந்திய கடற்படைக்கும் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் தினேஷ் கே. திரிபாதியும் நேற்று ஓய்வு பெற்றதால், அவருக்குப் பதிலாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் புதிய கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்கிறார். ஒரே நேரத்தில் ராணுவத்தின் இரண்டு முக்கிய பதவிகளுக்குப் புதிய அதிகாரிகள் வந்துள்ளனர். முப்படைகளின் புதிய தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, ராணுவத்தில் பல ஆண்டுகள் களத்தில் நின்று வேலை செய்த மிகப்பெரிய அனுபவசாலி. காஷ்மீர், எல்லைப் பகுதிகள் எனப் பல முக்கிய இடங்களில் படைகளை வழிநடத்திய பெருமை இவருக்கு உண்டு. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளும் தனித்தனியாகச் செயல்படாமல், ஏதாவது ஒரு அவசரநிலை என்றால் மூன்றும் ஒரே குடும்பம் போல இணைந்து சண்டை போட வேண்டும். அதற்குத் திட்டமிடுவதுதான் இந்த முப்படைத் தளபதியின் முக்கிய வேலை. அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையே ஒரு பாலமாக இவர் செயல்படுவார். தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெனரல் ராஜா சுப்ரமணி, 1985-ம் ஆண்டு 'கார்வால் ரைபிள்ஸ்' படையில் தனது ராணுவப் பயணத்தைத் தொடங்கினார். காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் வெற்றிகரமாகப் பணியாற்றியவர். பாகிஸ்தான் எல்லையில் நிலை கொண்டுள்ள இந்திய ராணுவத்தின் முக்கிய தாக்குதல் பிரிவான '2 கோர்ப்ஸ்'க்கு தலைமை தாங்கிய பெருமைக்குரியவர். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டமும் பெற்ற இவர், ராணுவத் துணைத் தளபதியாகவும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகவும் பணியாற்றிய நிபுணர் ஆவார். மறுபுறம், பெங்களூருவில் பிறந்த அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், சைனிக் பள்ளியில் பயின்று 1987-ல் கடற்படையில் இணைந்தார். நவீன கடற்போரில் மிக முக்கியமான தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர் (Electronic Warfare) துறைகளில் தனித்திறமை பெற்றவர். இந்தியாவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பலான 'ஐஎன்எஸ் விக்ரமாதித்யா' மற்றும் 'ஐஎன்எஸ் மைசூர்' உள்ளிட்ட முன்னணி போர்க்கப்பல்களுக்கு தலைமை தாங்கியுள்ளார். மேற்கத்திய கடற்படை (Western Fleet) தளபதியாகவும் சிறப்பாகப் பணியாற்றியவர். புதிய பதவியை ஏற்றுக்கொண்ட ராஜா சுப்ரமணி, நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். அவர் கூறியதாவது: "முப்படைத் தளபதியாகப் பொறுப்பேற்பதில் எனக்குப் பெருமை. என் மீது நம்பிக்கை வைத்த இந்த நாட்டிற்கு நன்றி. ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் என அனைவரும் ஒன்றாக இணைந்துதான் இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தப் போகிறோம். பிரதமர் மோடி சொல்லும் 'ஜே' (JAI) என்ற திட்டத்தின்படி நாம் செயல்படுவோம். 'J' என்றால் Jointness (முப்படைகளும் இணைந்து செயல்படுவது), 'A' என்றால் Atma Nirbharta (நமக்குத் தேவையான ஆயுதங்களை நம் நாட்டிலேயே தயாரிப்பது), 'I' என்றால் Innovation (புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பது). வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்குவதைக் குறைத்து, நம் நாட்டிலேயே தயாரிக்கப்படும் துப்பாக்கிகள், ஏவுகணைகள், பீரங்கிகளை ராணுவத்தில் அதிகமாகச் சேர்ப்பதுதான் என்னுடைய முதல் வேலையாக இருக்கும்." என்று அவர் பேசினார். முன்பெல்லாம் முப்படைகளுக்கும் தனித்தனி தலைவர்கள்தான் இருந்தார்கள். ஆனால், 1999-ல் நடந்த கார்கில் போருக்குப் பிறகு, முப்படைகளையும் ஒருங்கிணைக்க ஒரே ஒரு பொதுவான தலைவர் தேவை என்று ஒரு கமிட்டி பரிந்துரைத்தது. அதன்படியே, கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த 'சி.டி.எஸ்' (CDS) பதவி உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடற்படையின் புதிய தலைவராக வரும் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதனும் மிகச்சிறந்த அதிகாரி. இந்திய கடற்படையை நவீன காலத்திற்கு ஏற்ப டிஜிட்டலாகவும், சக்திவாய்ந்ததாகவும் மாற்றுவதில் இவருக்குப் பெரிய பங்கு இருக்கிறது. உலக அளவில் இப்போதைய சூழலில் பல நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனாவும், பாகிஸ்தானும் எப்போதும் வாலாட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியாவின் பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த இரண்டு புதிய தலைவர்களின் நியமனமும் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.யார் இந்த ராஜா சுப்ரமணி?
பதவி ஏற்றதும் சொன்ன முக்கிய விஷயம்:
இந்த முப்படை தளபதி பதவி எப்போது வந்தது?
புதிய கடற்படைத் தலைவர்: