ரயில்வே லோகோ பைலட்களுக்கு.. ஆல்கஹால் சோதனையில் புதிய சிக்கல்! பரிசீலனைக்கு போன விதிமுறை!

  • டெல்லி: ரயில்வே லோகோ பைலட்களுக்கு ஆல்கஹால் சோதனை நடத்தப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. ஆனால், குடிக்காதவர்களுக்கும் சோதனையில் பாசிட்டிவ் என வருவது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இந்த சோதனை முறையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.

    Advertisement

    கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி சதீஷ்கரின் பிலாஸ்பூர் அருகே 'பிலாஸ்பூர் மெமு' பயணிகள் ரயிலும் சரக்கு ரயில் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

    Advertisement

    இந்த விபத்திற்கு பிறகு, ஓட்டுநர்களுக்கு நடத்தப்பட்ட மூச்சு பரிசோதனையில் மது அருந்தியதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், அவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வகத்தில் பரிசோதித்த போது 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் 3 முதல் 10 மில்லி கிராம் வரை எத்தனால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்திய ரயில்வே மருத்துவ விதிகளின்படி, ரயில்களை இயக்கும் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் ரத்தத்தில் மதுவின் அளவு ஜீரோவாக இருக்க வேண்டும். ஆனால், தென்கிழக்கு மத்திய ரயில்வே மற்றும் வடக்கு ரயில்வே உள்ளிட்ட.. பல மண்டலங்களில் தலைமை மருத்துவ இயக்குனர்கள் ஒரு முக்கிய பிரச்சினையை முன்வைத்துள்ளனர். அதாவது, பெரும்பாலான ஆய்வகங்களால் 10 மில்லி கிராமுக்கும் குறைவாக குறைவான மதுவின் அளவை மிகத் துல்லியமாக கணக்கிட முடியாது.

    Advertisement

    மேலும், ஒருவர் மதுவை அருந்தா விட்டாலும் கூட அவரது உடலில் செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்ற காரணங்களால்.. இயல்பாகவே ரத்தத்தில் 10 மில்லிகிராம் வரை எத்தனால் அளவு பதிவாக வாய்ப்புள்ளது என மருத்துவ ரீதியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் தரப்பில் மது அருந்தாத அப்பாவியான ஓட்டுனர்கள் கூட இந்த 10 மி.கி வரையிலான இயற்கை மாற்றங்களால், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும், வேலை இழப்புக்கும் ஆளாகிறார்கள் என்று கவலை தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவைப் பொறுத்தவரை, மோட்டார் வாகன சட்டத்தின்படி.. 30 மில்லிகிராம் வரை ரத்தத்தில் மது கலந்திருக்க அனுமதி உண்டு. இதை சுட்டிக்காட்டி ரயில்வேயில் இந்த மிக கடுமையான விதியை மாற்ற கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

    Advertisement

    ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், பூஜ்ஜிய மது விதியை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை ரயில்வேயின் சுகாதார இயக்குனரகம் தற்போது தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

    இந்திய சட்டத்தின் படி, உடலில் 30 மி.கிராமுக்கு அதிகமாக மது அளவு இருந்தால் மட்டுமே.. அது தண்டனைக்குரிய குற்றமாகும். 30 மில்லி கிராமுக்கு கீழே மதுவின் அளவு இருந்தால் அது மனித உடலில் எந்த பெரிய பாதிப்பையும், தடுமாற்றத்தையும் ஏற்படுத்தாது. சுருக்கமாக சொல்வதனில் ஒரு பாட்டில் பியர் அடித்தால் உடலில் மதுவின் அளவு 40 மில்லி கிராமை தொடும். எனவே, ஒரு பாட்டில் பியர் தானே என்று நினைத்து குடித்தாலும்.. அது உடலுக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தும்.

    English Summary

    railway: The government remains firm on conducting alcohol tests for railway loco pilots. However, the fact that even those who do not consume alcohol are testing positive has created a problem. Consequently, there have been calls to reconsider this testing procedure.