டெல்லி: சுங்கச்சாவடிகளுக்கு அருகே வசிக்கும் மக்கள், டிஜிட்டல் முறையில் ஈஸியாக லோக்கல் பாஸ் வாங்கும் நடைமுறையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பொதுமக்கள் சுங்கச்சாவடிக்கு நேரில் செல்லாமல், ராஜமார்க்கயாத்ரா செயலி மூலம் லோக்கல் பாஸ் வாங்க முடியும். இதன் மூலம் சுமார் ஒரு மாத காலம் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் சுங்கச்சாவடியை கடந்து வரலாம்.
நெடுஞ்சாலைகளில் பொதுமக்கள் சிறப்பான ஒரு பயண அனுபவத்தை பெற நெடுஞ்சாலை ஆணையம் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஈஸியாக லோக்கல் பாஸ் வாங்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது இதுவரை லோக்கல் பாஸ் பெற விரும்பியவர்கள் சுங்கச்சாவடிக்கு நேரில் சென்று முகவரி உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போது அந்த நடைமுறை முழுவதும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ராஜமார்க்கயாத்ரா, அதாவது Rajmargyatra செயலியை டவுன்லோடு செய்தாலே போதும். வெறும் சில நிமிடங்களிலேயே அந்த செயலி மூலம் விண்ணப்பித்து, டிஜிட்டல் முறையில் லோக்கல் பாஸ் பெற முடியும். முதற்கட்டமாக இப்போது இந்த வசதி டெல்லியில் உள்ள முண்ட்கா - பக்கர்வாலா சுங்கச்சாவடியில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு சோதனை அடிப்படையில் இந்த முயற்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விரைவிலேயே நாடு முழுவதும் உள்ள பிற சுங்கச்சாவடிகளிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 20 கிமீ சுற்றளவுக்குள் வசிப்பவர்கள் இந்த பாஸுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் முகவரி, வாகன பதிவு எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பாஸ்டேக் விவரங்கள் டிஜிலாக்கர் மற்றும் வாஹன் (VAHAN) போன்ற அரசு டிஜிட்டல் தளங்களின் உதவியுடன் தானாகவே சரிபார்க்கப்படும். மேலும், ஜிஐஎஸ் அதாவது Geographic Information System தொழில்நுட்பத்தின் மூலம் முகவரி சரிபார்க்கப்படுவதால், பொதுமக்கள் ஒவ்வொரு மாதமும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மையும், துல்லியமும் உறுதி செய்யப்படும். இத்தோடு சேர்த்து தேசிய நெடுஞ்சாலை பயணிகளுக்காக 'MargMitra' என்ற புதிய டிஜிட்டல் உதவி மையத்தையும் நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. ராஜமார்க்கயாத்ரா செயலியில் வழங்கப்பட்டுள்ள இந்த மார்க்மித்ரா மூலம், தேசிய நெடுஞ்சாலை தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற முடியும்! இதன் கீழ் 22 இந்திய மொழிகளில் உதவிகளை பெறலாம். பாஸ்டேக் ரீசார்ஜ், ஆண்டு பாஸ், லோக்கல் பாஸ், இ-நோட்டீஸ் என பல்வேறு தகவல்களை பெற முடியும். தேசிய நெடுஞ்சாலைகளில் பழுதாக நின்ற வாகனங்கள், ஆக்கிரமிப்புகள், பாதுகாப்பு குறைபாடுகள் போன்றவற்றையும் கூட இந்த தளத்தில் இருந்தே மக்கள் நேரடியாக புகாரளிக்கலாம். பதிவு செய்யப்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு தானாகவே அனுப்பப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உங்கள் புகார் தீர்க்கப்படாமலேயே க்ளோஸ் செய்யப்பட்டாலும் அதில் இருந்தபடியே மேல்முறையீடு செய்யலாம். இந்த அனைத்து சேவைகளையும் பெற ராஜமார்க்கயாத்ரா செயலி கட்டாயமாகும். அதை ஆண்டிராய்டு செல்போன்களுக்கு ப்ளே ஸ்டோர், ஆப்பிள் மொபைல்களுக்கு ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.லோக்கல் பாஸ்
யாருக்கு பாஸ் கிடைக்கும்?
உதவி மையம்
புகாரளிக்கலாம்