நாடு முழுக்க.. டோல்கேட்களை இயக்க வருகிறது மத்திய கமெண்ட் சென்டர்! இனி நிற்கத் தேவையில்லை!

  • டெல்லி: இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இனி வாகனங்கள் டோல்கேட்களில் நிற்காமல் வேகமாகச் செல்வதற்கான மிகப்பெரிய திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தனது மையக் கண்காணிப்பு அமைப்பை முற்றிலுமாக மாற்றி அமைத்து, 'TMCC 2.0' என்ற அதிநவீன டிஜிட்டல் கட்டுப்பாட்டு தளத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளது.

    Advertisement

    என்ன இந்த புதிய திட்டம்?

    தற்போதுள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்கும்போது தடுப்புகள் உயர்த்தப்பட்டு, பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

    Advertisement

    ஆனால், புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள Multi-Lane Free Flow - MLFF என்ற முறையில், சாலையில் எவ்விதப் தடுப்புகளோ அல்லது சுங்கச்சாவடி கட்டிடங்களோ இருக்காது. வாகனங்கள் மணிக்கு 80 முதல் 100 கி.மீ வேகத்தில் சுங்கப்பகுதியைக் கடக்கும்போதே, மேலே அமைக்கப்பட்டிருக்கும் கேன்ட்ரி எனப்படும் இரும்பு வளைவுகளில் உள்ள கேமராக்கள் மற்றும் சென்சார்கள் மூலம் கட்டணம் தானாகப் பிடித்தம் செய்யப்படும்.

    தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது?

    RFID ஸ்கேனர்: வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள 'பாஸ்டேக்' கார்டை அதிவேகத்தில் ஸ்கேன் செய்யும்.

    ANPR கேமராக்கள்: ஆட்டோமேடிக் நம்பர் பிளேட் ரெகக்னிஷன் என்ற செயற்கை நுண்ணறிவு கொண்ட கேமராக்கள், வாகனத்தின் பதிவு எண்ணை உடனடியாகப் படம் பிடிக்கும்.

    Advertisement

    வங்கி இணைப்பு: இந்த இரண்டு தரவுகளையும் ஒப்பிட்டு, வாகனம் சுங்கப்பகுதியைக் கடந்து செல்லும்போதே உரிமையாளரின் பாஸ்டேக் கணக்கிலிருந்து கட்டணம் தானாகக் கழித்துக் கொள்ளப்படும்.

    TMCC 2.0: ஒரே மையத்தில் முழு கண்காணிப்பு

    இந்த அதிநவீன முறையைக் கையாள, NHAI-ன் கிளை அமைப்பான இந்தியன் ஹைவேஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் தனது டோல் கண்காணிப்பு மையத்தை TMCC 2.0 ஆக மாற்ற உள்ளது.

    நாடு முழுவதும் உள்ள 1,200-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நடைபெறும் கட்டணப் பரிவர்த்தனைகள், தினசரி வருவாய் கணக்குகள், கேமராக்கள் மற்றும் சென்சார்களின் வேலை செய்யும் திறன், நிதிச் சரிபார்ப்பு போன்ற அனைத்தையும் டெல்லியில் உள்ள ஒரே டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரலையாககண்காணிக்க இந்த புதிய தளம் பயன்படும்.

    Advertisement

    எங்கே தொடங்கப்படுகிறது?

    தற்போது இந்தத் திட்டம் சோதனை முறையில் தமிழ்நாடு, குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 17 முக்கிய இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர்

    இதன் முதல் கட்ட விரிவாக்கமாக, தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் (நெமிலி), சென்னாசமுத்திரம் மற்றும் பரனூர் சுங்கச்சாவடிகள் உட்பட, குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள 105 சுங்கச்சாவடிகளில் இந்தத் தடையில்லா சுங்கக் கட்டண முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

    வாகன ஓட்டிகளுக்கு என்ன பயன்?

    டோல்கேட்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. வாகனங்கள் நிற்பதும், மீண்டும் வேகமெடுப்பதும் தவிர்க்கப்படுவதால் கணிசமான அளவு எரிபொருள் சேமிக்கப்படும். கட்டண வசூல் முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்படுவதால் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.

    Advertisement

    இந்திய நெடுஞ்சாலைப் பயணத்தை முற்றிலும் வேகமானதாகவும், சிக்கலற்றதாகவும் மாற்றப்போகும் இந்தத் தொழில்நுட்ப மாற்றம், நாட்டின் நெடுஞ்சாலை கட்டமைப்பில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

    English Summary

    NHAI to End Highway Toll Gates: New Barrier-Less Tolling System comes soon