டெல்லி: அமைச்சர் நிதின் கட்கரியின் மகன் சர்க்கரை ஆலை நடத்தும் நிலையில், அதன் காரணமாகவே எத்தனால் கலப்பு பெட்ரோல் செய்யப்படுவதாகவும் இதில் அவர்களுக்கு நேரடி லாபம் கிடைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவின. இந்தச் சூழலில் தான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாக முக்கிய விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.
இந்தியாவில் இப்போது E20 பெட்ரோல் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் வாகனங்களின் இன்ஜினுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மைலேஜ் குறைக்கும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதிலும் குறிப்பாக எத்தனால் பிஸ்னஸ்ஸை நிதின் கட்கரி மகன் செய்வது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில் தான் சமீபத்தில் பேட்டியளித்த அமைச்சர் நிதின் கட்கரி சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். எத்தனால் கலப்பு திட்டத்தைத் தான் பல ஆண்டுகளாக ஆதரித்து வருவதாகவும், அதற்கும் தனது மகனின் பிஸ்னஸுக்கும் தொடர்பில்லை என்று குற்றச்சாட்டுகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் நிதின் கட்கரி, "இது அரசியல் நோக்கத்துடன் பரப்பப்படும் தகவல்! என்னையும் மத்திய அரசையும் குறிவைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. E20 பெட்ரோல் வாகன இன்ஜின்களை சேதப்படுத்தும் என்ற குற்றச்சாட்டுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. E10க்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களும் E20 எரிபொருளைப் பயன்படுத்த முடியும். இதுவரை இன்ஜின் சேதம் தொடர்பாக எந்தவொரு பெரிய புகாரும் வரவில்லை" என்று அவர் கூறினார். மேலும், மாருதி சுசுகி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் E20 எரிபொருளால் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றே தெரிவித்துள்ளதாக நிதின் கட்கரி சுட்டிக்காட்டினார். அவர் மேலும், "யாருக்காவது பிரச்சனை இருந்தால்.. அவர்கள் நேரடியாக எனது அமைச்சகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என கூறியிருந்தேன். ஆனால் இதுவரை எந்த புகாரும் வரவில்லை. மைலேஜ் குறைவைப் பொறுத்தவரை எத்தனாலின் வெப்ப ஆற்றல் பெட்ரோலை விட குறைவு தான். இதனால் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது சிறிய அளவில் மைலேஜ் குறையலாம். ஆனால் நகரங்களில் போக்குவரத்து நெரிசலில் பயன்படுத்தும்போது பெரிய வித்தியாசம் இருக்காது. அதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்" என்று விளக்கினார். தனது மகன் நடத்தும் நிறுவனங்களுக்கு எத்தனால் திட்டத்தால் லாபம் கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், "என் மகன்கள் நடத்தும் சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தி நடக்கிறது. ஆனால் அது நிறுவனத்தின் மொத்த வணிகத்தில் 10 சதவீதம் மட்டுமே. நாடு முழுவதும் உள்ள எத்தனால் சந்தையில் அவர்களின் பங்கு 0.5 சதவீதத்திற்கும் குறைவானது. மேலும் அந்த நிறுவனங்களுக்கு ரூ.1,600 கோடி கடன் உள்ளது. எத்தனால் விலையை நிர்ணயிப்பது மத்திய அமைச்சரவை. அதில் எனக்கு எந்த பங்கும் இல்லை. மேலும், நான் எதோ இன்று வந்து எத்தனாலை ஆதரிப்பது போல சிலர் பேசுகிறார்கள். ஆனால் மெத்தனால், ஹைட்ரஜன், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து மாற்று எரிபொருட்களையும் நான் தொடர்ந்து ஆதரித்தே வந்துள்ளேன்.. இந்தியா மிக பெரிய அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. மாற்று எரிபொருட்கள் மூலம் வெளிநாட்டு செலவைக் குறைக்க முடியும். அதே நேரத்தில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசையும் கட்டுப்படுத்த முடியும். டெல்லி போன்ற நகரங்களில் காற்று மாசுக்கு 40 சதவீதம் வரை வாகனங்களே காரணமாக இருக்கிறது. அதை நம்மால் குறைக்க முடியும்" என்றார். கரும்பில் இருந்து மட்டுமல்லாமல் சோளம், நெல், விவசாய கழிவுகள், மூங்கில் போன்றவற்றிலிருந்தும் எத்தனால் தயாரிப்பதை ஊக்குவித்து வருவதாக அவர் தெரிவித்தார். அவர் மேலும், "பீகார், உத்தரப் பிரதேச விவசாயிகளுக்கு மக்காச்சோளம் நல்ல வருமானத்தை வழங்கியுள்ளது. பஞ்சாப், ஹரியானாவில் பிரச்சினையாக இருந்த பராலி தற்போது எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது" என்றார். E20 பெட்ரோலை விரும்பாதவர்களுக்கு 100 சதவீத பெட்ரோல் வழங்கும் திட்டம் குறித்துக் கேட்கப்பட்டபோது, "இப்போதும் இந்த திட்டம் இருக்கிறது. யார் விரும்பினாலும் முழுமையான பெட்ரோலை பயன்படுத்தலாம். ஆனால் அதற்காக அதிக விலை செலுத்த வேண்டியிருக்கும்" என்று திட்டவட்டமாக நிதின் கட்கரி பதிலளித்தார்.கட்கரி
புகார் வரவில்லை
மகன் பிஸ்மஸ்
சிக்கல் இல்லை