டெல்லி: 'நீட்' முறைகேடுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி நாளை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தான் டெல்லி காவல்துறை வார்னிங்குடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
'நீட்' உள்பட மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சமூக ஆர்வலர் சோனம் வாங்சுங் உள்பட 4 பேர் 21 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இந்நிலையில் தான் நேற்று அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பலரும் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுங் உள்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நாளை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே முடிவெடுத்துள்ளனர். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்யக்கோரி இந்த பேரணி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் டெல்லி போலீசார் வார்னிங் செய்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ''நாடாளுமன்றத்தை நோக்கிய நாளைய பேரணிக்கு யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. யாரும் அனுமதி கேட்கவும் இல்லை. நாங்கள் அனுமதி கொடுக்கவும் இல்லை. டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படடுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்குவதால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது'' என்றார். மேலும், டெல்லியை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 163ன் படி (முந்தைய 144 தடை உத்தரவு) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.