வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லாவிட்டால் பெட்ரோல் கிடையாது? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

  • டெல்லி: வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லையென்றால் பெட்ரோல், டீசல் வழங்குவதை நிறுத்துவது குறித்த திட்டத்தை சோதனை அடிப்படையில் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள 56 சதவீத வாகனங்கள் இன்சூரன்ஸ் இன்றி இயங்குவதாக அதிர்ச்சி தெரிவித்த உச்ச நீதிமன்றம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

    Advertisement

    வாகன இன்சூரன்ஸ் தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதிகள் சஞ்சய் கரோல், பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

    Advertisement

    இன்சூரன்ஸ் இல்லாமல் உள்ளன

    புதிய வாகனங்களை வாங்கும்போதோ அல்லது பதிவு செய்யும்போதோ, கார்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கும் மூன்றாம் தரப்பு காப்பீட்டை (third-party insurance) வாங்குவது கட்டாயம் என்று 2018-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வெளியாகி 8 ஆண்டுகள் ஆகியும் பெரும்பாலான வாகனங்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் உள்ளன.

    எரிபொருள் வழங்கக் கூடாது

    மோட்டார் வாகன சட்டப்படி அனைத்து வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் இருப்பது கட்டாயம். இந்த விதியை முழுமையாக அமல்படுத்த புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும். இதற்காக சோதனை அடிப்படையிலான முன்னோடி திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். வாகனத்தின் பதிவு எண்ணுடன் அதன் காப்பீட்டு விவரங்களை இணைக்கலாம்.

    Advertisement

    பெட்ரோல், டீசல் நிரப்ப வரும் வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் இருக்கிறதா? என்ற வசதியை ஏற்படுத்தலாம். ஒருவேளை இன்சூரன்ஸ் இல்லாவிட்டால், இன்சூரன்ஸ் எடுக்கும் வரை அந்த வாகனத்திற்கு எரிபொருள் வழங்காமல் இருக்கலாம்” என்று உத்தரவிட்டது.

    வழக்கின் பின்னணி:

    ஆந்திராவை சேர்ந்த டி.ராமு என்பவர் தனது காரில் திருப்பதியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத லாரி, ராமு சென்ற கார் மீது மோதியது. இதில், அவர் உயிரிழந்தார். இதையடுத்து, ராமுவின் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், ராமு தனிப்பட்ட விபத்து பாலிசி எடுக்கவில்லை என்று கூறி இழப்பீட்டு தொகையை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது.

    Advertisement

    10 லட்சம் வழங்க உத்தரவு

    இன்சூரன்ஸ் நிறுவனம் வைத்த வாதத்தை ஏற்ற தீர்ப்பாயம், குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட மறுத்துவிட்டது. தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வாகன இன்சூரன்ஸ் முழுமையானது என்பதால் ராமு குடும்பத்தினருக்கு 10.50 லட்சம் இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும் என்றும் 7.5 சதவீத வட்டியுடன் தொகையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போதுதான் மேற்கண்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

    English Summary

    Supreme Court has directed the Central Government to consider implementing, on a trial basis, a plan to stop the supply of petrol and diesel to vehicles that lack insurance. The Court issued this directive after expressing shock over the fact that 56 percent of vehicles in the country are operating without insurance.