டெல்லி: கேரளாவின் பெயரை கேரளம் என பெயர் மாற்றம் செய்வதற்கான கேரளா (பெயர் மாற்றம்) மசோதா 2026 லோக்சபாவில் இன்று நிறைவேறியது. அடுத்ததாக ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவின் ஒப்புதல் பெறப்பட்டு கேரளாவின் பெயரை திடீரென கேரளம் என்று மாற்றுவதன் பின்னணி பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவின் பெயரை கேரளம் என்று மாற்ற வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை உள்ளது. இதனைமாநில அரசால் செய்ய முடியாது. மத்திய அரசின் அனுமதி இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.
அதாவது நம் நாட்டில் குறிப்பிட்ட மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அரசியலமைப்பின் 1வது அட்டவணை, 3வது அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும். இந்த திருத்தம் மேற்கொள்வதற்காக 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதியே கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரளாவின் பெயரை கேரளம் என்று மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் அந்த தீர்மானம் கேரளா சட்டசபை ஒருமனதாக நிறைவேற்றியது. இது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு நடைமுறை சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, திருத்தப்பட்ட தீர்மானம் ஒன்று 2024 ஜூன் மாதம் 4ம் தேதி கேரளா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சட்டத்துறை உள்பட பல்வேறு மத்திய அமைச்சகங்கள் இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கியது. 2026 பிப்ரவரி மாதம் 24ம் தேதி மத்திய அமைச்சரவையும் கேரளாவின் பெயரை கேரளம் என்று பெயர் மாற்ற ஒப்புதல் வழங்கிய நிலையில் லோக்சபாவில் இன்று கேரளா பெயரை கேரளம் என்று பெயர் மாற்றும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படும். அதன்பிறகு ஜனாதிபதி திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அரசியலமைப்பின் 1வது மற்றும் 3வது அட்டவணைகளில் கேரளாவின் பெயர் கேரளம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும். கேரளா என்பது மலையாள மொழியின் உச்சரிப்பில் இல்லை. கேரளம் என்பது தான் மலையாள மொழியின் உச்சரிப்பில் உள்ளது. இதனால் கேரளாவின் பெயரை கேரளம் என்று மாற்றம் செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை உள்ளது.