பெற்றோர் இருவருமே IAS அதிகாரியாக இருந்தால் எதற்கு இடஒதுக்கீடு? உச்ச நீதிமன்றம் கேள்வி

  • டெல்லி: மத்திய மற்றும் மாநில அளவிலான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இடஒதுக்கீட்டில் உள்ள 'கிரீமி லேயர்' எனப்படும் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள் விதிகள் குறித்து உச்ச நீதிமன்றம் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. கிரீமி லேயர் தொடர்பாக தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றம் இந்த கருத்துகளை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    நமது நாட்டில் இப்போது பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய சாதியினருக்கு இட ஒதுக்கீடு பலன்கள் வழங்கப்படுகிறது. இதற்கிடையே கிரிமீ லேயர் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

    Advertisement

    உச்ச நீதிமன்றம்

    இடஒதுக்கீடு மூலம் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்த குடும்பங்களின் குழந்தைகள், தொடர்ந்து இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற வேண்டுமா என்று உச்ச நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது. இத்தகைய முன்னேற்றங்கள் சமூகத்தில் ஒரு நல்ல சமூக நகர்வை ஏற்படுத்துகின்றன என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

    நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை விசாரித்தபோது, நீதிபதி நாகரத்னா தனது கவலைகளையும் கேள்விகளையும் முன்வைத்தார். இது தொடர்பாக அவர், "பெற்றோர் இருவருமே ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்தால், அவர்களது குழந்தைகளுக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்? கல்வி மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் மூலம் சமூகத்தில் ஒரு நகர்வு ஏற்படுகிறது. அதன் பிறகும் அவர்கள் பிள்ளைகளுக்காக மீண்டும் இடஒதுக்கீடு கோரினால், நாம் இதிலிருந்து எப்போதுமே வெளியே வர முடியாது.

    Advertisement

    உச்ச நீதிமன்றம் கேள்வி

    இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது, பெற்றோர் படித்து நல்ல வேலைகளில் நல்ல வருமானம் வாங்குகிறார்கள். அதன் பிறகு குழந்தைகளும் மீண்டும் இடஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள். அவர்கள் இடஒதுக்கீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். இதில் ஒரு சமநிலை இருக்க வேண்டும். சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு சரிதான். ஆனால் பெற்றோர் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஒரு நிலையை எட்டிய பிறகு, அவர்கள் நல்ல நிலையில் இருக்கும்போது அவர்களது விலக்கைக் கேள்வி கேட்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்!" என்றார்.

    கர்நாடக மாநிலத்தின் பின்தங்கிய வகுப்பினரின் II(A) பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள குருபா சமூகத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளர், கர்நாடகா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் உதவிப் பொறியாளர் பணிக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவரது பெற்றோர் இருவரும் மாநில அரசு ஊழியர்களாக இருப்பதாலும், அவர்களது கூட்டு ஆண்டு வருமானம் சுமார் ₹19.48 லட்சமாக இருப்பதாலும், அவர் 'கிரீமி லேயர்' வரம்பிற்குள் வருகிறார் எனக் கூறி அவருக்குச் சாதிச் சான்றிதழ் வழங்க மறுத்தது.

    Advertisement

    வாதம்

    இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், "சம்பள வருமானத்தை விலக்கி வைக்கும் விதி மத்திய அரசு இடஒதுக்கீட்டிற்கு மட்டுமே பொருந்தும், கர்நாடக மாநில இடஒதுக்கீட்டிற்குப் பொருந்தாது" என்று கூறி, அவரை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கியதை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் உறுதி செய்தது. இதை எதிர்த்துதான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வேட்பாளரின் தந்தை மாத அடிப்படைச் சம்பளமாக ₹53,900ம், தாய் அடிப்படைச் சம்பளமாக ₹52,650ம் பெற்று வருகின்றனர் என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

    அந்த நபர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சஷாங்க் ரத்னூ, "அரசு ஊழியர்களின் கிரீமி லேயரைத் தீர்மானிப்பதில் சம்பள வருமானம் ஒரு காரணியாக இருக்கக் கூடாது.. அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை கிரீமி லேயர் விலக்கு என்பது பெற்றோரின் அந்தஸ்தைப் பொறுத்ததே தவிர, வெறும் சம்பள வருமானத்தை மட்டும் பொறுத்தது அல்ல. ஒருவேளை சம்பளத்தை மட்டுமே தகுதியாக வைத்தால், டிரைவர்கள், பியூன்கள், கிளார்க்குகள் போன்ற கீழ்நிலை அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கூட இடஒதுக்கீட்டுப் பலன்களிலிருந்து விலக்கப்படும் அபாயம் ஏற்படும்..

    Advertisement

    கிரீமி லேயர்

    கிரீமி லேயரைக் கணக்கிடும்போது சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தைக் கணக்கில் கொள்ளக் கூடாது.. வணிகம் அல்லது பிற ஆதாரங்கள் மூலமான வருமானத்தை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும் என கர்நாடக அரசு தெளிவாக கூறுகிறது. அனைத்து வருமானங்களையும் கணக்கில் எடுத்தால், ஓபிசி இடஒதுக்கீட்டிற்கும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) இடஒதுக்கீட்டிற்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும்" என்றார். இந்த கேட்ட பிறகே நீதிபதி மேலே கூறப்பட்டுள்ள கருத்துகளை கூறினார்.

    English Summary

    Supreme Court bench comprising Justices BV Nagarathna and Ujjal Bhuyan questioned the continuous benefits of reservation for economically advanced families(ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம்): Supreme court on OBC Creamy Layer Rules.