கட்சி தாவிய சிவசேனா எம்பிக்கள்.. அங்கீகரித்த சபாநாயகர் ஓம் பிர்லா! நீதிமன்றத்திற்கு போகும் தாக்கரே

  • டெல்லி: உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்பிக்கள் 6 பேர், ஷிண்டே சிவசேனாவில் இணைந்திருந்தனர். இந்த கட்சி தாவலுக்கு முறைப்படி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அங்கீகாரம் அளித்தார். இது தவிர திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்களின் கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.

    Advertisement

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த முறை நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மறுபுறம் நீட் விவகாரம், சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகளும் முடிவு செய்துள்ளன.

    Advertisement

    முக்கிய முடிவு

    இந்தச் சூழலில் தான் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சில முக்கிய அரசியல் முடிவுகளை எடுத்துள்ளார். சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியைச் சேர்ந்த ஆறு எம்பிக்கள், மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் இணைந்திருந்தனர். அந்த முடிவை ஓம் பிர்லா அங்கீகரித்துள்ளார். இந்த முடிவின் மூலம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் எம்பிக்கள் எண்ணிக்கை 7ல் இருந்து 13 ஆக உயர்ந்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ்

    அதேபோல் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பிரிந்து தேசிய குடிமக்கள் கட்சியில் இணைந்த 20 எம்பிக்களுக்கு மக்களவையில் தனி இருக்கை ஒதுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் அந்த இணைப்பை அங்கீகரித்து அவர்களை என்சிபிஐ கட்சி உறுப்பினர்களாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அந்த விவகாரம் தொடர்ந்து பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மறுபுறம் உத்தவ் சிவசேனா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும், தங்கள் கட்சியில் இருந்து விலகிய எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தன. இருப்பினும், அந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை என்றே தெரிகிறது. இந்த விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்ற சபாநாயகர் இந்த முடிவை எடுத்துள்ளார். கடந்த காலங்களில் இதுபோன்ற சூழல்களில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை ஆய்வு செய்து, அதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    திமுக

    இதற்கிடையில் திமுகவும் மக்களவையில் தங்களுக்கு தனி இருக்கை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக நீடித்த கூட்டணியை முறித்த காங்கிரஸ் இப்போது விஜய்யின் தவெகவுடன் கை கோர்த்துள்ளது. இதையடுத்து காங்கிரஸ் எம்பிக்கள் அருகில் அமர விரும்பவில்லை என்று திமுக கூறிவிட்டது. இந்தக் கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    பின்னணி

    2024 லோக்சபா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மொத்தம் 29 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 20 பேர் கட்சியில் இருந்து விலகி, NCPI என்ற கட்சியில் இணைந்தனர். மேலும், அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, என்டிஏ கூட்டணியில் இணைய விருப்பமும் தெரிவித்துள்ளனர்.

    உத்தவ் சிவசேனாவை பொறுத்தவரை 2024 தேர்தலில் 9 எம்.பி.க்கள் வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது அதில் 6 பேர் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்துள்ளனர். இதையடுத்து, கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. மேலும், சபாநாயகர் ஓம் பிர்லாவின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக உள்ளதாக சிவசேனா அறிவித்துள்ளது. இந்த முடிவு அரசியலமைப்புக்கு முரணானது, சட்டவிரோதமானது என்று உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளது.

    English Summary

    Lok Sabha Speaker Om Birla has approved the merger of six Shiv Sena (UBT) MPs with the Eknath Shinde-led Shiv Sena(நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செய்திகள்): Parliament monsoon session latest news in tamil.