சென்னை உட்பட 5 நகரங்கள்.. குவியல் குவியலாக வரும் வெங்காயம்! கந்தா எக்ஸ்பிரஸால் குறைய போகுது விலை

  • டெல்லி: வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு ரயில் மூலம் வெங்காயத்தை கொண்டு செல்லும் "கந்தா எக்ஸ்பிரஸ்" திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு சமையல் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முதலில் அரிசி விலை கணிசமாக உயர்ந்த நிலையில், பிறகு சர்க்கரை விலை உயர்ந்தது. அதைத் தொடர்ந்து இப்போது சமையலுக்கு அத்தியாவசியமாக இருக்கும் வெங்காயத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    Advertisement

    வெங்காயம்

    வெங்காயம் என்பது நாடு முழுக்க சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒன்றாக இருக்கும் நிலையில், இதனால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதற்கிடையே வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதற்காக முக்கிய நகரங்களுக்கு வெங்காயத்தை அனுப்பும் "கந்தா எக்ஸ்பிரஸ்" திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கானில் இருந்து டெல்லி, சென்னை, கொச்சி, மதுரை மற்றும் கவுகாத்தி ஆகிய 5 முக்கிய நகரங்களுக்கு வெங்காயம் கொண்டு செல்லப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, லாசல்கானில் இருந்து டெல்லிக்கு 840 டன் கையிருப்பு வெங்காயம் அனுப்பப்பட்டது.. அதிக அளவில் வெங்காயத்தை சந்தைகளுக்கு கொண்டு சென்று, அங்கு விநியோகத்தை அதிகரிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

    Advertisement

    59% விலை உயர்வு

    கடந்த சில வாரங்களில் மட்டும் வெங்காயத்தின் விலை 59% வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது. மொத்த சந்தைகளில் வெங்காயத்தின் வரத்து அதிகரித்தால், மொத்த விலை குறைய வாய்ப்பு உள்ளது. இது அப்படியே சில்லறை மார்கெட்டிலும் எதிரொலிக்கும். இது வெங்காய விலையை கட்டுப்படுத்த உதவும் என்பதாலேயே மத்திய அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

    வழக்கம்

    பருவகால மாற்றங்களின் காரணமாக வெங்காயத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது வழக்கம். வெவ்வேறு பயிர் சுழற்சி காலங்களில் சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு மாறுவதால், சில நேரங்களில் விலை உயர்வு ஏற்படுகிறது. விலை உயர்ந்துள்ள போதிலும், நாட்டில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேவையான அளவு வெங்காயம் நாட்டில் கையிருப்பில் இருப்பதாகவும் தட்டுப்பாடு இல்லை என்பதால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

    Advertisement

    உற்பத்தி குறையவில்லை

    2025-26 நிதியாண்டில் வெங்காய உற்பத்தி சுமார் 307 லட்சம் டன்னாக இருக்கும் என மத்திய அரசு கணிக்கிறது. இது முந்தைய ஆண்டின் 308 லட்சம் டன் உற்பத்தியுடன் கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது. இதை குறிப்பிட்டே ஒட்டுமொத்த வெங்காய உற்பத்தியில் பெரிய சரிவு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இப்போது தற்காலிகமாக உற்பத்தி குறைந்துள்ளதே, வெங்காய விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது.

    இதன் காரணமாக மொத்த சந்தைகளுக்கு அதிக அளவு வெங்காயத்தை கொண்டு செல்வதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. இதற்காகவே 'கந்தா எக்ஸ்பிரஸ்' மூலம் நாசிக்கில் இருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு ரயில் மூலம் வெங்காயம் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் மொத்த சந்தைகளில் வெங்காயத்தின் வரத்து அதிகரித்து, விலை குறையும் என அரசு எதிர்பார்க்கிறது.

    English Summary

    Onion prices have surged by up to 59% in recent weeks(குறைய போகுது வெங்காய விலை): Centre has launched ‘Kanda Express’ to transport onions from Nashik to Delhi, Chennai.