ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானை கதறவிட்டவர்.. இந்திய விமானப்படை தளபதியாக அசுதோஷ் தேர்வு.. யார் இவர்?

  • டெல்லி: இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக அசுதோஷ் தீட்சித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானை பந்தாடிய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை விமானப்படையில் வழிநடத்தி வெற்றிக்கண்ட இந்த அசுதோஷ் தீட்சித் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    இந்திய விமானப்படையின் தளபதியாக ஏபி சிங் செயல்பட்டு வருகிறார். இவர் இந்த மாதம் இறுதியில் ஓய்வு பெற உள்ளார். அக்டோபர் 31ம் தேதியுடன் அவர் ஓய்வு பெற உள்ளார். இதனால் விமானப்படையை வழிநடத்தும் புதிய தளபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    அதன்படி இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் தேர்வாகி உள்ளார். இவர் நம்முடைய இந்திய விமானப்படையின் 29வது தளபதியாக தேர்வாகி உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. இவர் அக்டோபர் 31ம் தேதி மதியம் பொறுப்பேற்று இந்திய விமானப்படையை வழிநடத்த உள்ளார்.

    பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தனை நினைவிருக்கா? விமானப்படையில் திடீர் ஓய்வு.. என்ன நடந்தது?

    அசுதோஷ் தீட்சித் கடந்த 1966 டிசம்பர் 9 ம் தேதி பிறந்தார். இவர் வங்கதேசத்தில் Staff Course-யை முடித்தார். பிறகு டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பட்டம் பெற்றார். அதன்பிறகு 1986ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய விமானப்படையில் பணிக்கு சேர்ந்தார். போர் விமான பிரிவில் அதிகாரியாக செயல்பட்டார். இவர் இந்திய விமானப்படையில் சுமார் 40 ஆண்டு கால பணி அனுபவம் கொண்டவர். இவர் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

    Advertisement

    முதலில் அதிகாரியாக பணிக்கு சேர்ந்த இவர் சோதனை விமான ஓட்டியாகவும் (experimental test pilot) செயல்பட்டார். பிறகு விமான ஓட்டிகளுக்கான பயிற்சியாளர்களாக மாறினார். மொத்தமாக 3,500 மணி நேரத்திற்கும் மேலாக விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்டவர். மிராஜ்-2000, மிக் ரக விமானங்கள், கிரண், ஜாகுவார், ஐஎல்-78, ஹாக் மற்றும் தேஜஸ் உள்ளிட்ட விமானங்களை இவர் இயக்கி உள்ளார்.

    விமான தயாரிப்பு திட்டங்களில் முக்கிய பங்காற்றி உள்ளார். குறிப்பாக உள்நாட்டு தயாரிப்பான இலகுரக தேஜஸ் விமானம் தயாரிப்பு திட்டத்தில் முக்கிய நபராக இருந்தார். அதுமட்டுமின்றி மிராஜ்-2000 படைப்பிரிவு , மேற்குப் பகுதியில் உள்ள முன்னணி போர் விமானத் தளம் மற்றும் தெற்குப் பகுதியில் உள்ள போர் விமானப் பயிற்சி தளம் ஆகியவற்றிற்குத் தலைமை தாங்கியுள்ளார்.

    Advertisement

    விமான படை தலைமையகத்தில் விமான படை தேவைகளுக்கான முதன்மை இயக்குநர், விமானப் படை தலைமை அதிகாரியின் உதவித் தலைவர் (திட்டங்கள்) உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளார். விமானப்படையில் துணை தலைவர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாக மத்திய விமானப் படைப் பிரிவின் தலைவராக இருந்தார். பின்னர் படைத் தலைமைத் தளபதிகள் குழுவின் தலைவருக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரியாகப் பணியாற்றினார்.

    தற்போது அசுதோஷ் தீட்சித் இந்திய விமானப்படையில் துணை தலைவராக உள்ளார். இந்த பொறுப்பு என்பது நம் நாட்டின் விமானப்படையின் திட்டமிடல், கொள்கை மற்றும் செயல்பாட்டு திறன் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டிருக்கும்.

    Advertisement

    இவர் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் விமானப்படையை வழிநடத்தியவர். இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நம் நாட்டின் விமானப்படை தான் முக்கிய பங்காற்றிய நிலையில் அதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் அசுதோஷ் தீட்சித்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன்பாக 1999 கார்கில் போரின் போது பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய விமானப்படை மேற்கொண்ட வான்வழி தாக்குதலான 'ஆபரேஷன் சஃபேத் சாகர்', ஜம்மு காஷ்மீரில் நிலவிய பயங்கரவாதம் மற்றும் ஊடுருவலை ஒடுக்குவதற்காக இந்திய ராணுவத்தால் 1990களில்தொடங்கப்பட்ட ஒரு நீண்டகால உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான 'ஆபரேஷன் ரக்சக்' உள்ளிட்டவற்றில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Ashutosh Dixit has been appointed as the new commander in the Indian Air Force. Who is Ashutosh Dixit—the man who led the Air Force to success in 'Operation Sindhur' against Pakistan—and what is his background? Let us take a look here.