டெல்லி: இந்த காலத்தில் பணிநீக்கம் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறியுள்ளது. அப்படி தான் ஆரக்கிள் நிறுவனத்தில் வேலை செய்த பல ஆயிரம் இந்திய ஊழியர்கள் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
எண்டர்பிரைஸ் சாப்ட்வேர் துறையின் முன்னணி நிறுவனமான ஆரக்கிள், இந்தியாவில் சமீபத்தில் தான் பணிநீக்க நடவடிக்கையை எடுத்திருந்தது. இதற்கிடையே ஆரக்கிள் நிறுவனம் இப்போது மீண்டும் மிக பெரிய அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாலிஸ் பணிபுரியும் சுமார் 2,000 முதல் 4,000 ஊழியர்கள் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
குறிப்பாக பிரோடுக்ட் இன்ஜினியரிங் பிரிவில் பணியாற்றிய தொழில்நுட்ப ஊழியர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாகவே உலக அளவில் ஆரக்கிள் கடந்த 12 மாதங்களில் சுமார் 21,000 பணியிடங்களை குறைத்துள்ளதாகவும், இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 10,000 முதல் 12,000 பணியிடங்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த பணிநீக்கங்களின் திடீரென நடந்ததால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். லிங்க்ட் இன் மற்றும் ரெட்டிட் போன்ற தளங்களில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். சில ஊழியர்களுக்கு அதிகாலை 6.50 மணிக்கே பணிநீக்க மெயில் வந்ததாக கூறப்படுகிறது. அதில் நிர்வாக காரணங்களுக்காக பணி நீக்கம் மேற்கொள்ளப்படுவதாகவும், அதுவே தங்களது கடைசி வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக ஊழியர்கள் கூறியுள்ளனர். பொதுவாக எதிர்பார்த்த அளவுக்கு பெர்பார்மன்ஸ் இல்லை என்றால் பணிநீக்கம் நடக்கும். அது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்த பணிநீக்கம் பெர்பார்மன்ஸ் அடிப்படையில் மட்டும் நடக்கவில்லையாம். சிறப்பாக வேலை செய்த பொறியாளர்கள் மற்றும் முக்கியமான தொழில்நுட்ப பணிகளை கவனித்து வந்தவர்கள் கூட பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனராம். சில டீம்கள் மொத்தமாகவே நீக்கப்பட்டுள்ளதாம். முதலீட்டாளர்கள் நலன் அடிப்படையிலேயே பணிநீக்கம் நடந்துள்ளது. இதற்கிடையே ஆரக்கிள் நிறுவனத்தில் 12 ஆண்டுகள் பணியாற்றிய சௌரப் சாஹா என்பவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அவரது மனைவி பூஜா லிங்ட் இன் தளத்தில் பகிர்ந்துள்ளார். அன்றைய தினம் அவர் வழக்கம் போல லாகின் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரால் லாகின் செய்ய முடியவில்லை. மாறாக எரர் மெயில் வந்துள்ளது. அதன் பிறகே தனது வேலை பறிபோனதை அறிந்ததாக அவரது மனைவி கூறியிருக்கிறார். 12 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் உழைத்த ஊழியருக்கு இறுதியில் பணிநீக்கமே பரிசாகக் கிடைத்ததாக, ஆரக்கிள் நிறுவனத்தில் பணியாற்றி ஆட்குறைப்புக்குள்ளான சௌரப் சாஹாவின் மனைவி பூஜா சாஹா லிங்க்ட்இனில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அவரது மனைவி மேலும், "விடுமுறை, பண்டிகைகள், மருத்துவமனை சிகிச்சை என எதையும் பொருட்படுத்தாமல் நிறுவனத்துக்காக தொடர்ந்து உழைத்து வந்தவர். அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்திலும் கூட பணிபுரிந்தார்" என வேதனையை தெரிவித்துள்ளார். மேலும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் ஆரக்கிள் அலுவலகத்தின் அருகே சென்று மண்ணை தூக்கி வாரும் சம்பவமும் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மாறும் முதலீடுகள் பழைய சாப்ட்வேர் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்து வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்களும் க்ளவுட் மற்றும் ஏஐ துறைகளை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றன. ஆரக்கிள் நிறுவனமும் ஏஐ மற்றும் க்ளவுட் சார்ந்த டேட்டா சென்டர் கட்டமைப்பில் மிக பெரிய முதலீடுகளை செய்து வருகிறது. குறிப்பாக அமேசான் நிறுவனத்துடன் இணைந்து இதில் மிக பெரிய முதலீடுகளை செய்துள்ளன. மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் டேட்டா சென்டர்களை அமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது. இதனால் இஞ்சினியரிங் பிரிவில் செலவுகளை குறைத்து, அந்த நிதியை ஏஐ, க்ளவுட் மற்றும் டேட்டா சென்டர் கட்டமைப்புகளுக்கு மாற்ற ஆரக்கிள் நினைக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த வேலை நீக்கம் நடந்துள்ளது. ஆரக்கிள் மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களிலும் பணிநீக்கம் அதிகரிக்கும் நிலையில், பல டெக் ஊழியர்கள் தங்கள் கேரியரையே மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற எதிர்பாராத வேலை இழப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்க 6 முதல் 12 மாதங்களுக்கான எமர்ஜென்சி பண்ட் வைத்திருப்பது அவசியம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, அதிக இஎம்ஐ கொண்ட கார் அல்லது வீட்டுக் கடன் போன்றவற்றை எடுப்பதில் கவனம் தேவை என்றும் கூறப்படுகிறது. ஒரே நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றினால் வேலை பாதுகாப்பு இருக்கும் என்றே பலரும் நினைத்து வந்தனர். ஆனால், இப்போது நீண்ட காலம் வேலை செய்து வருவோரும் பாதிக்கப்படுகிறார்கள். தொடர்ச்சியான Upskilling, புதிய திறன்களை கற்றுக்கொள்வது தேவைப்படுகிறது.பணிநீக்கம்
எதற்காக பணிநீக்கம்
12 ஆண்டுகள்
ஊழியர்கள் கோபம்
என்ன செய்யலாம்!