எதிர்க்கட்சிகளுக்கு விழும் அடி.. இது Own Goal ஆச்சே.. டெல்லியில் சம்பவத்தால் இப்படியொரு சிக்கலா!

  • டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அவை தொடங்கியது முதலே முடங்கி வருகிறது. அவை முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே நாடாளுமன்றம் முடங்குவதால் மத்திய அரசை விட எதிர்க்கட்சிகளுக்கே இழப்பு அதிகம் என்ற ஒரு கருத்தை ஒரு தரப்பு முன்வைத்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்!

    Advertisement

    கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் கேள்வி நேரம் பாதிக்கப்படுவதுடன், மசோதாக்கள் மீதான விவாதங்களும் தடைப்பட்டு, அவைகள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

    Advertisement

    சசி தரூர்

    அவை தொடங்கிய சில நிமிடங்களில் ஒத்திவைக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. பொதுவாக நாடாளுமன்றம் முடங்கும்போது, ஆளும் அரசால் அவையை நடத்த முடியவில்லை என்ற எண்ணமே பொதுவாக ஏற்படும். ஆனால், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளி மற்றும் ஒத்திவைப்புகள் ஏற்பட்டால், அதனால் அதிகம் பாதிக்கப்படுவது எதிர்க்கட்சிகள்தான் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறியுள்ளார்.

    அரசியல் போராட்டங்கள், தர்ணாக்கள், ஆர்ப்பாட்டங்கள், முழக்கங்கள் ஆகியவை ஜனநாயகத்தில் சட்டப்பூர்வமானவை என்றும் அவற்றை நடத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் தரூர் கூறினார். ஆனால் நாடாளுமன்றம் என்பது வாதம், விவாதம் மற்றும் காரணங்களை முன்வைப்பதன் மூலம் ஜனநாயக செயல்பாடு நடைபெறும் இடம் என அவர் குறிப்பிட்டார்.

    Advertisement

    எதிர்க்கட்சிகள்

    அரசிடம் பெரும்பான்மை பலம் இருப்பதால், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எந்த அளவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், இறுதியில் அரசு தனது எம்பிக்களின் பலத்தை வைத்து மசோதாக்களை நிறைவேற்ற முடியும். ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு அரசை கேள்வி கேட்கவும், அதன் கொள்கைகளை விமர்சிக்கவும் நாடாளுமன்றத்தை தவிர வேறு எங்கும் போதிய வாய்ப்பு இல்லை என்பதே சசி தரூர் வாதம்.

    கேள்வி நேரம் இதற்கு சிறந்த உதாரணம். எம்பிக்களுக்கு அரசின் நிர்வாகம் மற்றும் கொள்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்பும் உரிமை உள்ளது. குறிப்பாக, முக்கிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்களே நேரடியாக பதில் அளிக்க வேண்டும். அதன் பிறகு உறுப்பினர்கள் துணை கேள்விகளையும் கேட்க முடியும். இதன் மூலம் எதிர்க்கட்சி எம்பிக்கள் அரசிடம் புள்ளிவிவரங்கள், விளக்கங்கள் மற்றும் பதில்களைக் கோர முடியும். மத்திய அமைச்சர்களை நேரடியாக எதிர்கொண்டு அவர்களின் முடிவுகள் குறித்து கேள்வி கேட்க முடியும்!

    Advertisement

    கவனத்தை ஈர்க்க முடியும்

    கேள்வி நேரத்திற்கு அடுத்ததாக வரும் ஜீரோ ஹவர் எனப்படும் நேரமில்லா நேரம் மூலமாகவும் முக்கியமான அவசர பிரச்சினைகளை உறுப்பினர்கள் எழுப்ப முடியும். அதேபோல், விதி 377ன் கீழும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியும். இது போன்ற நடைமுறைகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு முக்கியமானவை. ஏனெனில், தங்கள் தொகுதி மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு அதிகாரப்பூர்வமாகக் கொண்டு செல்லவும், அவை பதிவில் இடம்பெற செய்யவும் இதுவே ஒரே வாய்ப்பு!

    ஒரு மசோதாவை அரசு பெரும்பான்மை மூலம் நிறைவேற்றிவிட முடியும் என்றாலும், அதற்கு முன் நடைபெறும் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பல வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மசோதாவில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டலாம். திருத்தங்களை முன்மொழியலாம். அரசின் வாதங்களை கேள்விக்குள்ளாக்கலாம். எதிர்க்கருத்துகளை அவை பதிவில் இடம்பெறச் செய்யலாம். நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாடு முழுக்க கவனிக்கப்படும் என்பதால் மக்களிடையே இவை எளிதாக சென்று சேரும்.

    Advertisement

    அவை நடக்க வேண்டும்

    எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக நாடாளுமன்ற குழுக்களும் கூட அமைக்கப்படும். அதாவது சில மசோதாக்களில் போதிய ஆதரவு இல்லை அல்லது எதிர்ப்புகள் அதிகம் இருந்தால்.. மசோதாக்களை ஆய்வு செய்யவும், ஆதாரங்களை பரிசீலிக்கவும், உறுப்பினர்கள் விரிவான விவாதம் நடத்தவும் இந்த குழுக்கள் அமைக்கப்படும். அதிலும் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இது எல்லாம் நடக்க முதலில் அவை நடக்க வேண்டும்!

    இது தொடர்பாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது அடல் பிகாரி வாஜ்பாய் கூறிய சில கருத்துகளை சதி தரூர் நினைவு கூர்ந்தார். அதாவது, "எங்களிடம் வாதங்கள் இருக்கின்றன; உங்களிடம் வாக்குகள் இருக்கின்றன" என்பதே அது. அரசிடம் மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை இருக்கலாம். ஆனால் அந்த மசோதாவின் குறைகளை சுட்டிக்காட்டுவது மற்றும் மாற்றுக் கருத்துகளை முன்வைப்பது எதிர்க்கட்சியின் முக்கிய பணி.

    Advertisement

    மசோதாக்கள் நிறைவேறுதே

    அதாவது நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கும்போது, அரசு தனது நம்பர் பலத்தை இழப்பதில்லை. இப்போது கூட அவை முடங்கி இருந்தாலும் சில மசோதாக்களை அரசு விவாதமே இல்லாமல் நிறைவேற்றி உள்ளது ஒரு உதாரணம்! மாறாக, எதிர்க்கட்சியே கேள்வி நேரம், விவாதம், திருத்தம், குழு ஆய்வு உள்ளிட்ட தனது முக்கியமான ஆயுதங்களை இழக்கிறது. காங்கிரஸ் தலைவர்களே சசி தரூரின் இந்த கருத்துகளை முழுமையாக ஏற்க மாட்டார்கள் என்றாலும் இது யோசிக்க வேண்டிய ஒன்று என்பதில் மாற்று கருத்து இல்லை!

    English Summary

    Parliament Monsoon Session has been repeatedly disrupted since July 21(தொடர்ந்து நாடாளுமன்றம் முடங்குவதால் ஏற்படும் பிரச்சினை): Parliament Deadlock latest news in tamil.