டெல்லி: நாடாளுமன்றக் நிலைகுழுக்களில் இரண்டு தலைவர் பதவிகளை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இழந்துள்ளது. அதே நேரத்தில், திமுக எம்பிக்களான திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர் தங்களது தலைவர் பதவிகளை தக்க வைத்துக் கொண்டனர். காங்கிரஸ் எம்பிக்கள் சசிதரூர் உள்ளிட்டோருக்கும் பழைய பொறுப்பு அப்படியே வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக்களை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் ராஜ்யசபா தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று மாற்றி அமைத்துள்ளனர். நாடாளுமன்ற நிலைக்குழு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.
நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் மசோதாக்கள், பட்ஜெட், அரசின் கொள்கைகள், துணைச் சட்டங்கள், அரசின் வாக்குறுதிகள், சிறப்புரிமைகள், மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை விரிவாக ஆய்வு செய்ய இந்த நிலைக்குழுவே உதவுகிறது. எனவே மிக முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்தக்குழுவில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 2 குழுக்களின் தலைவர் பதவிகளை இழந்துள்ளது. வர்த்தகம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவி, திரிணாமுல் காங்கிரசின் டோலா சென்னிடம் இருந்து பாஜகவை சேர்ந்த எம்பியான சுதன்சு திரிவேதிக்கு வழங்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரசின் அதிருப்தி தலைவர் ககோலி கோஷ் தஸ்திதருக்கு மம்தா பானர்ஜி ஆதரவாளரான எம்.பி. கீர்த்தி ஆசாத் வகித்த ரசாயனம் மற்றும் உரம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், எதிர்க்கட்சி எம்பி.க்கள் பலர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக திமுக எம்பி திருச்சி சிவா, தொழில் துறை தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராக நீடிக்கிறார். கனிமொழி எம்பி, உணவு, நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது வினியோக நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும் மீண்டும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். காங்கிரஸ் எம்பி சசிதரூர், வெளியுறவு தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும், சரண்ஜித்சிங் சன்னி, வேளாண்மை தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், ஊரக வளர்ச்சிக்கான குழுவின் தலைவர் பதவியை காங்கிரசின் சப்தகிரி சங்கர் உலகா, சுகாதாரம் தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவர் பதவியை சமாஜ்வாடி கட்சியின் ராம்கோபால் வர்மா ஆகியோர் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். பாஜகவின் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய்குமார் ஜா, சிவசேனாவின் ஸ்ரீரங் பர்னே ஆகியோரும் அவரவர் பதவிகளில் மீண்டும் நியமனம் செய்யப்பட்டனர். பாஜக எம்பி அனுராக் தாக்குர், ராஜீவ் பிரதாப் ரூடி, பார்த்ருஹரி மஹதாப், ராதாமோகன் தாஸ் அகர்வால், நிஷிகாந்த் துபே, மேதா விஷ்ரம் குல் கர்னி ஆகியோருக்கும் கடந்த முறை வகித்த அதேபொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி எம்பிக்கள் இருவரின் முக்கிய பொறுப்பு பறிக்கப்பட்டு இருப்பது மம்தாவுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா தலைவரான டெரிக் ஓ பிரைன், சிபி ராதாகிருஷ்னன் இவ்விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில், நாடாளுமன்றம் இருண்ட அறையாக மாற்றப்பட்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.மம்தா பானர்ஜி
திருச்சி சிவா, கனிமொழி
காங்கிரஸ், சமாஜ்வாடி