டெல்லி: நீட் முறைகேடுகளை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது டெல்லி போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ள நிலையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமை என்றும் போராட்டம் நடத்துவதாலேயே தடியடி நடத்தக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்தை தெரிவித்துள்ளது. மேலும், போலீஸ் வரம்பு மீறி நடப்பதை நியாயப்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதமாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த வாரம் திங்கள்கிழமை அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர். அப்போது திடீரென ஒரு கட்டத்தில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்தது. டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர் போராட்டங்களின் போது போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி அதீத பலத்தோடு நடந்து கொண்டதாக சொல்லி தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசாரின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், போராட்டம் நடத்துவது என்பது அடிப்படை உரிமை என்றனர். இது தொடர்பாக நீதிபதிகள் மேலும், "அமைதியான மற்றும் சட்டப்பூர்வமான போராட்டம் நடத்தும் உரிமை அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுகிறது. போராட்டம் அமைதியாக நடைபெறும்போது, வெறுமனே போராட்டம் நடக்கிறது என்பதற்காக தடியடி நடத்த முடியாது" என்று நீதிபதிகள் தெளிவாகத் தெரிவித்தனர். அதேநேரத்தில், போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட போலீசாருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஜூலை 20ஆம் தேதி, அதாவது கடந்த வாரம் திங்கள்கிழமை டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாக செல்ல முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் தடியடி நடத்திய போலீசார், கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பிறகே, போராட்டம் மேலும் தீவிரமடைந்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியது குறிப்பிடத்தக்கது. விசாரணை அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி ஜாய்மாலா பாக்சி, "இரு தரப்பினரின் பாதுகாப்பும் சம அளவில் முக்கியமானது. போலீசாரும் தாக்கப்படக் கூடாது. அதில் மாற்று கருத்து இல்லை. அதேநேரம் இதுபோன்ற வன்முறை சூழல்களை கையாள போலீசாருக்கான SOP ஏன் போதுமானதாக இல்லை. இது குறித்து மாநில அரசு விளக்கம் தர வேண்டும்" என்றார். இதையடுத்து அனைத்து புதிய மனுக்களையும் நாளை செவ்வாய்க்கிழமை ஒன்றாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. இந்த மனுக்களில் ஒன்றில், பீகாரின் சிவான் பகுதியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தை கலைக்க ஏகே47 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், "அனைத்து குடிமக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். யாரேனும் எல்லை மீறினால் அது தடுக்கப்பட வேண்டும். அதற்கான தெளிவான நடைமுறைகள் இருக்க வேண்டும். இது டெல்லி பற்றிய பிரச்சினை மட்டும் அல்ல. நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. வெறுமனே போராட்டம் நடக்கிறது என்பதற்காக தடியடி நடத்த முடியாது. ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக சுய ஒழுக்கம் இருக்க வேண்டும். இளைஞர்கள் தங்களது கருத்து வேறுபாடுகளை ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை அரசு வழங்க வேண்டும். அதேநேரத்தில் சமூக விரோத சக்திகள் போராட்டத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. இளைஞர்கள் போராட்டம் நடத்த விரும்பினால் அதற்கான இடமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். ஆனால் சமூக விரோத சக்திகள் அதில் ஊடுருவினால் அதை அனுமதிக்கக் கூடாது. இதற்காக தெளிவான நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.உச்ச நீதிமன்றம்
பின்னணி
தடியடி நடத்த முடியாது