சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கேகே ரமேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இது முதல்வர் விஜய் அரசுக்கு புதிய தலைவலியாக பார்க்கப்படுகிறது.
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக தலைமை செயலகம் மற்றும் சட்டசபை செயல்பட்டு வருகிறது. இடப்பற்றாக்குறையால் புதிய தலைமை செயலகம் - சட்டசபை கட்ட தமிழகத்தை ஆளும் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பட்டினப்பாக்கத்தில் மொத்தம் 25.55 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுமான டிசைன்களை இறுதி செய்ய 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கேகே ரமேஷ் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் - சட்டசபை அமைக்க திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது திமுக தவிர எதிர்க்கட்சிகளான அதிமுக, பாமக, நாம் தமிழர் உள்பட பிற கட்சியினரும் மீனவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இங்கு புதிய தலைமை செயலகம் - சட்டசபை அமைத்தால் 9 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் மீனவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முதல்வர் விஜய்யை சந்தித்து திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி வரும் செப்டம்பர் 29ம் தேதி அனைத்து மீனவ கிராம மக்களும் பட்டினப்பாக்கத்தில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.