எங்களுக்கே ஆர்டர் போடுறீங்களா? டென்ஷனான உச்சநீதிமன்ற நீதிபதிகள்! ஆவணங்களை வீசிய மனுதாரரால் பரபரப்பு

  • டெல்லி: ''நீதித்துறை ஊழியரே..லக்னோவில் உதவி போலீஸ் ஆணையர் மீது வழக்குப்பதிவு செய்ய நீங்கள் உத்தரவிட வேண்டும் என்று நான் உத்தரவு பிறப்பிக்கிறேன்'' என்று உச்சநீதிமன்ற நீதிமன்றத்தில் வழக்கில் ஆஜரான மனுதாரர் ஒருவர் கூறினார். இதனால் கோபமான நீதிபதிகள், ''நீங்கள் எங்களுக்கு ஆர்டர் போடுறீங்களா?'' என்று கேட்க மனுதாரர் தனது கையில் இருந்த ஆவணங்களை தூக்கி வீசியதால் உச்சநீதிமன்றமே பெரும் பரபரப்பானது.

    Advertisement

    உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல் பிரதாப். இவர் வழக்கு ஒன்று சம்பந்தமாக போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதையடுத்து உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    Advertisement

    பொதுவாக புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை ஒருவர் நாடி நிவாரணம் பெற முடியும். அந்த வகையில் பிரபல் பிரதாப் லக்னோவில் உள்ள விகாஷ் நகர் உதவி போலீஸ் ஆணையர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லக்னோ ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை நாடினார்.

    ஆனால் நீதிமன்றம் அந்த வழக்கில் தலையிட மறுத்தது. இதையடுத்து பிரபல் பிரதாப் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 'ரிட்' மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்திருந்தார்.
    இந்த மனு மீது இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேவி விஸ்வநாதன் மற்றும் அலோக் அராதே அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    Advertisement

    அப்போது மனுதாரர் பிரபல் பிரதாப் ஆஜராகி இருந்தார். அப்போது அவர்,''மிஸ்டர் நீதித்துறை ஊழியரே, லக்னோ விகாஷ் நகர் உதவி போலீஸ் கமிஷனர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று நான் உங்களுக்கு ஆர்டர் போடுகிறேன்'' என்று ஆக்ரோஷமாக கூறினார். இதையடுத்து நீதிபதி விஸ்வநாதன், ''நீங்கள் எனக்கு ஆர்டர் போடுறீங்களா? நீங்கள் எங்களுக்கு ஆர்டர் போடுறீங்களா?'' என்று கேள்வி எழுப்பினார்.

    இதையடுத்து மனுதாரர் பதில் எதுவும் சொல்லாமல் தனது கையில் இருந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் வீசி எறிந்தார். மேலும் நீதிபதிகளை நோக்கி அவதூறான கருத்துகளை பேசினார். குறிப்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சனம் செய்தார். இதையடுத்து அங்கிருந்த பாதுகாவலர்கள் உடனடியாக நீதிமன்றத்திற்குள் வந்து மனுதாரரை வெளியே அழைத்து சென்றனர்.

    Advertisement

    இந்த சம்பவத்தை தொடர்ந்தும் மனுதாரர் பிரபல் பிரதாப் மீது நீதிபதிகள் ஒழுங்கு நடவடிக்கை உள்பட பிற நடவடிக்கைக்கு உத்தரவிடவில்லை. அவர்கள் அமைதியாக வழக்கு சாராம்சத்தை ஆராய்ந்தனர். அதன்பிறகு நீதிபதி விஸ்வநாதன், ''சம்பந்தப்பட்ட நபர் மீது எந்த நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் முன்மொழியவில்லை. இந்த வழக்கின் தகுதிை பொறுத்தவரை அவரது மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிடுவதற்கு சரியான காரணங்கள் இல்லை. இதனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிற'' என அதிரடியாக உத்தரவிட்டார். இதன்மூலம் பிரபல் பிரதாப்பின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    English Summary

    In Supreme Court A man Prabal Pratab, says, Mr Judicial Servant, I order you to order the registration of FiR against ACP Vikas Nagar, Lucknow". Angered by this, the judges asked, " you are ordering me? you are ordeing us?''. After this he throws case papers on Supreme Court room.