டெல்லி: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருக்கிறது. மட்டுமல்லாது எரிபொருள் தட்டுப்பாட்டை சரி செய்ய, E20 பெட்ரோல் எனும் புதிய தலைவலியை மத்திய அரசு மக்கள் தலையில் கட்டியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ஹார்முஸ் ஜலசந்தி கிடையாது. உண்மையான காரணம் வேறு என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் சண்டை. அதனால.. சர்வதேச கச்சா எண்ணெய் கடல் வழித்தடமான ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டிருப்பதாகவும்.. இதுதான் இந்தியா உட்பட உலகம் முழுவதும் எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால், இது பாதி உண்மை என்றும்.. எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு சுத்திகரிப்பு நிலையங்கள்தான் காரணம் எனவும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எகனாமிக்ஸ் டைம்ஸில் இது தொடர்பான கட்டுரை இன்று வெளியாகியிருக்கிறது. அதில், ஆசியாவிலும் உலக அளவிலும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள்.. அதாவது பெட்ரோல், டீசல் போன்றவை விநியோகத்தில் ஏற்பட்டிருக்கம் தட்டுப்பாடுதான் தற்போது உண்மையான பிரச்சனை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் தாராளமாக கிடைத்தாலும், அதை எரிபொருளாக மாற்றும் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தற்போது சந்தை.. கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை பற்றி மட்டுமே கவலைப்படுகிறது. போர் பதற்றம் காரணமாக பல சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. சில நிலையங்கள் தங்கள் உற்பத்தி திறனை குறைத்துக்கொண்டிருக்கின்றன. இதனால்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்சனைகள் காரணமாக எரிபொருள் விலை குறையாமல் இருக்கிறது. ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வருகிறது. ஆனால் உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய சுத்திகரிப்பு ஆலைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல சீனா தனது உள்நாட்டு எண்ணெய் தேவைக்காக ஏற்றுமதியை குறைத்துக்கொண்டிருக்கிறது. இதெல்லாம் டிமாண்டை அதிகரித்திருக்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு என்பது வெறுமென வாகனங்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல. இது பணவீக்கத்தை அதிகரித்து உலக பொருளாதாரத்தையே பாதிக்கக்கூடிய டைம் பாம் என்று கட்டுரை எச்சரித்துள்ளது.