கந்தலாகி போகும் ரூபாய் நோட்டுகள்.. வர போகுதா பிளாஸ்டிக்? பரபரப்பைக் கிளப்பிய மெசேஜ்! பறந்த விளக்கம்!

  • டெல்லி: இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக விரைவில் பிளாஸ்டிக் அல்லது பாலிமர் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, வரும் 30-ஆம் தேதி முதல் புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட உள்ளதாகவும், தற்போதுள்ள நோட்டுகள் படிப்படியாக நீக்கப்படலாம் என்றும் பல்வேறு பதிவுகள் வைரலாகின.

    Advertisement

    இந்த தகவல் பரவிய நிலையில், மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் இதுகுறித்து விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தற்போது பிளாஸ்டிக் அல்லது பாலிமர் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எந்த திட்டமும் இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி தெளிவாக தெரிவித்துள்ளது.

    Advertisement

    இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகள் சாதாரண காகிதத்தால் தயாரிக்கப்படுகின்றன என்ற கருத்து பலரிடம் உள்ளது. ஆனால் உண்மையில் அவை பருத்தி மற்றும் லினன் கலவையால் உருவாக்கப்படுகின்றன.

    ரூபாய் நோட்டு

    இதனால் நோட்டுகள் வலிமையாக இருந்தாலும், நீண்ட கால பயன்பாட்டில் கிழிவது, கசங்குவது மற்றும் அழுக்காகுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக பழைய மற்றும் சேதமடைந்த நோட்டுகளை திரும்பப் பெற்று புதிய நோட்டுகளை அச்சிட வேண்டிய நிலை ரிசர்வ் வங்கிக்கு உருவாகிறது. இதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதனால்தான் கடந்த சில ஆண்டுகளாக பாலிமர் நோட்டுகள் குறித்த விவாதங்கள் அவ்வப்போது எழுந்து வருகின்றன.

    Advertisement

    பாலிமர் நோட்டு

    பாலிமர் நோட்டுகள் என்பது காகிதம் அல்லது பருத்திக்கு பதிலாக பாலிப்ரோப்பிலீன் என்ற சிறப்பு வகை பிளாஸ்டிக் பொருளால் தயாரிக்கப்படும் நோட்டுகள் ஆகும். இவ்வகை நோட்டுகள் ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சாதாரண நோட்டுகளை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிக ஆயுள் கொண்டதாகவும், தண்ணீர் மற்றும் அழுக்கால் எளிதில் பாதிக்கப்படாததாகவும் கூறப்படுகிறது.

    பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்

    மேலும், பாலிமர் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க முடியும் என்பதால் கள்ள நோட்டுகளை தயாரிப்பது மிகவும் கடினமாக இருக்கும். இதனால் எதிர்காலத்தில் பல நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்துள்ளன. இந்த நிலையில், இந்தியாவிலும் பாலிமர் நோட்டுகள் அறிமுகமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. குறிப்பாக, வரும் 30-ஆம் தேதி முதல் புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட உள்ளதாகவும், தற்போதைய நோட்டுகள் விரைவில் செல்லாது போகும் என்றும் சிலர் பதிவுகளை பகிர்ந்தனர்.

    Advertisement

    ரிசர்வ் வங்கி

    ஆனால் இந்த தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தற்போது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் எதையும் அறிவிக்கவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் ஆதாரமற்றவை என்றும் கூறப்பட்டுள்ளது.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    எனவே, பொதுமக்கள் வதந்திகளை நம்பி தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம் என்றும், தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளும் வழக்கம்போல் செல்லுபடியாகவே உள்ளன என்றும் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை உடனடியாக நம்பாமல், ரிசர்வ் வங்கி மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    English Summary

    RBI and PIB clarify viral claims on plastic currency notes; no plan to replace current rupee notes in India.