நந்தன் நீலகேனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பாக உயர்மட்ட குழு - பிரதமர் மோடி அறிவிப்பு

  • டெல்லி: தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நீலகேனி தலைமையில் உயர்மட்டக் குழு அமைத்துள்ளதாக பிரதமர் மோடி தனது புதிய ரீல்ஸ் வீடியோவில் அறிவித்துள்ளார். இக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில், இனிவரும் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பிரதமர் நரேந்திர மோடி இன்று சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர், "நண்பர்களே, மாணவர்களின் எதிர்காலத்திற்காக இந்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியவர்கள் சிறைகளில் இருக்கிறார்கள். நாங்கள் விரைவு நீதிமன்றங்களை அமைத்துள்ளோம்.

    Advertisement

    நாளை நாடாளுமன்றத்திலும், கடுமையான சட்ட விதிகளுடன் ஒரு புதிய சட்டத்தை உருவாக்கும் திசையில் நாங்கள் முன்னேறி வருகிறோம். அதேநேரம் நாம் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். நமது தேர்வு முறை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். மேலும், நமது தேர்வு முறையில் தற்போது தொழில்நுட்பத்தின் அதிகபட்ச பயன்பாடு இருக்க வேண்டும்.

    இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, தேர்வு சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தும் வகையில், உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நீலகேனி தலைமையில் ஒரு உயர்மட்டப் பணிக்குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதன் அறிக்கையின் அடிப்படையில், வரவிருக்கும் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்," என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை ராஜினாமா செய்தார். அவரது ராஜிநாமாவை வலியுறுத்தி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காக்ரோச் ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வந்தது. இதையடுத்து சிஜேபி பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையும் நடத்தியது.

    மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமா மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான அழுத்தம், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வந்தன. இந்நிலையில் தான் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    Advertisement

    மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் நேற்று முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மற்றும் ஆதார் திட்டத்தின் வடிவமைப்பாளரான நந்தன் நீலகேனி இக்குழுவிற்குத் தலைமை தாங்குவார். மேலும், இதில் முன்னாள் இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத், முன்னாள் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் தபன் தேகா, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடி, முன்னாள் கல்விச் செயலாளர் அனிதா கர்வால் மற்றும் தளவாட நிபுணர் அம்ரித் லால் மீனா ஆகியோர் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    A task force headed by Infosys co-founder Nandan Nilekani will look into how to improve India's examination systems and give a report to the government, PM Narendra Modi said in a video statement today.